தன்னுடைய கணவரோடு திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் பெண் காவலரைத் தகுந்த ஆதாரத்தோடு மாட்டிவிட நினைத்த பெண், அந்தப் பெண் காவலரின் காக்கி உடுப்பை எடுத்து வந்து, கரூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
கரூர் மாவட்டம், செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. இவருடைய மனைவி வனிதா. காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு, 6 வயதில் மகள் இருக்கிறார். கார்த்தி, கரூர் செங்குந்தபுரம் பகுதியில் செல்போன் விற்பனை, ரீசார்ஜ் கடை நடத்திவருவதாகச் சொல்லப்படுகிறது. கரூர் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றிவரும் கௌசல்யா என்பவருடன் கார்த்தி திருமணம் தாண்டிய உறவில் இருந்துவந்ததாகத் தெரிகிறது.
இதை வனிதா பலமுறை கண்டித்தும், இருவரும் தகாத உறவை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த வனிதா, ‘எனது கணவர் நடத்தும் கடையில் கௌசல்யா, எனது கணவரோடு இருந்தபோது, கௌசல்யாவின் உடையை எடுத்து வந்துவிட்டேன். இந்தாங்க ஆதாரம். கௌசல்யா மீது நடவடிக்கை எடுங்க’ என்று கரூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, “நானும் என் கணவரும் காதலித்து திருமணம் பண்ணிக்கிட்டோம். என்மீது அவ்வளவு உயிரா இருப்பார். ஒரு வருஷத்துக்கு முன்னாடி என்னோட கணவர் கடையில் ரீசார்ஜ் பண்ண வந்த கௌசல்யாவுக்கும், என் கணவருக்கும் உறவு ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் அந்த விஷயம் எனக்கும் தெரிந்தது. என் கணவரைக் கண்டித்தேன். ஆனால், கௌசல்யாதான் என் கணவரை மயக்கி வைத்திருக்கிறார்னு தெரியவந்தது.
அதனால், ஒரு வருஷத்துக்கு முன்னாடியே கௌசல்யாகிட்ட, ‘என் கணவரை என்கிட்ட கொடுத்துரு’னு சொன்னேன். ஆனால், அதுக்கு கௌசல்யா மறுத்துட்டாங்க. அதனால், எஸ்.பி அலுவலகம் வரை புகார் கொடுத்தேன். ‘இனி, கார்த்திக்கோடு உள்ள தொடர்பை துண்டிச்சுக்கிறேன்’னு கௌசல்யா சொன்னதால், அவரைக் கண்டிச்சு விட்டுட்டாங்க. ஆனால், கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் ரெண்டு பேருக்கும் இடையில் உறவு வளர்ந்தது. கௌசல்யாவுக்கும் திருமணமாகி, குழந்தை இருக்கு. என்னை எங்க அம்மா வீட்டுக்கு அடிச்சு துரத்திட்டாங்க.
என் கணவரும் கௌசல்யாவும் என் கணவரோட கடையில் இரவில் தங்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால், கௌசல்யாவை ஆதாரத்தோட மாட்டிவிடுவதற்காக, என் கணவர் கடைக்குப் போனேன். அப்போ, கடைக்குள் கௌசல்யாவின் காக்கி உடை இருந்தது. அதை எடுத்துக்கிட்டு வந்துட்டேன். உடனே, கௌசல்யா என் வீட்டுக்கு வந்து, ‘என் உடையை ஒழுங்கா கொடுத்துரு’னு கேட்டாங்க. நான் மறுத்துட்டு, ‘என் கணவரை விட்டுரு. நான் உன் உடையை தர்றேன்’னு சொன்னேன். இதுல ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் நடந்தது.