யாழ், குருநகர் இளைஞன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தமைறைவாக இருந்த ரௌடிக் கும்பலை சேர்ந்த 6 பேர் இன்று பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி குருநகர் திருச்சிலுவை சுகநல நிலையத்திற்கு அண்மையாக, குருநகரை சேர்ந்த 5 இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த எட்மண்ட் ஜெரன்ஸ் (24) என்பவர் யாழ் போதனா வைத்தியசாலையில் 24ஆம் திகதி உயிரிழந்தார்.
ஜெரன்ஸை தாக்கும் நோக்கத்துடன் அவரை ஏமாற்றி அழைத்து வாள்வெட்டு நடத்தப்பட்டது. இதனால் இது திட்டமிட்ட கொலையென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
ஊரடங்கு நேரத்தில் நடத்தப்பட்ட இந்த குற்றச்சம்பவத்தை தொடர்ந்து, பாசையூரை சேர்ந்த கெமி ரௌடிக்குழு உறுப்பினர்கள் தமது மனைவி, பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்கள்.
கெமி குழுவே தாக்குதலை நடத்தியதாக பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து, அவர்களை பொலிசார் விரட்ட ஆரம்பித்தனர்.
பல இடங்களிலும் அவர் தலைமறைவாக முயன்றும், இனிமேல் தப்ப முடியாதென்ற நிலைமையில், இன்று பகல் பிரதான 6 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
சட்டத்தரணி ஒருவர் ஊடாகவே அவர்கள் சரணடைந்துள்ளனர்.