கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சங்குப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பாலம் ஆபத்தான நிலை நோக்கி செல்கின்றதா என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தையும், கிளிநொச்சியையும் இணைக்கும் குறித்த பாலம் 16.01.2011 அன்று இன்றைய பிரதமரும் அப்போதைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.
புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த பாலம் மன்னார் யாழ் வீதியில் அமைந்துள்ளது. பாரிய நிதி செலவில் நிர்மானிக்கப்பட்ட குறித்த பாலம் தற்பொழுது சேதமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
பாலம் அமைந்துள்ள பகுதியில் காணப்படும் கொங்கிரீட்டிலான பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பாலம் துருப்பிடித்து சிதைவுகள் ஏற்பட்டு வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.
பாலத்தை தாங்கும் ஆணிகள், நட்டுகள் மற்றும் பாலத்தின் முக்கிய பகுதிகளில் துருப்பிடித்து சிதைவடைகின்றமையையும் அவதானிக்க முடிவதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, பாலத்தின் வடக்கு பக்கமாக பொருத்தபபட்டிருந்த பாதுகாப்பு பகுதிகள் சிலவும் காணாமல் போயுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.
ஆரம்பத்தில் வருடம் தோறும் குறித்த பாலத்தை பராமரித்து வந்ததாகவும், தற்பொழுது குறித்த பாலம் பராமரிக்கப்படுவதில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் வரிப்பணத்தினைக் கொண்டு பாரிய நிதி செலவில் அமைக்கப்பட்ட குறித்த பாலத்தை உரிய முறையில் பாதுகாக்கி வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.