‘பட்ட விரட்டி’ நாவலாசிரியர் காலித் ஹூசைனி ஆப்கானிஸ்தான் பற்றி அக்கறைப்படுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்?
“ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.”- காலித் ஹூசைனி
மொழிபெயர்ப்பு- எல்
காலித் ஹூசைனியின் நாவல்கள் உலகு தழுவிய வாசகர்களுக்கு போருக்கும் அச்சத்திற்கும் அப்பாற்பட்ட ஆப்கானிஸ்தானின் ஒரு பக்கத்தை காட்டின.
இவரது முதலாவது நாவலான ‘The Kite Runner’ 2003ம் ஆண்டில் வெளியிடப்பட்டு உலகெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இது ‘பட்ட விரட்டி’ என தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. இந்நாவல் வெளிவந்த காலம் – செப்டெம்பர் 11 தாக்குதல், அதனைத் தொடர்ந்த ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கை.
அதனைத் தொடர்ந்து வெளிவந்த A Thousand Splendid Sun (2007), The Mountains Echoed (2013) நாவல்களுக்குள்ளும் ஆப்கானிஸ்தான் இருந்தது. இவைகளும் முதல் நாவலைப் போல உலகெங்கும் வரவேற்பைப் பெற்றன.
அனைவரும் பிரமிக்கின்ற வகையில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, உலகின் கவனம் மீண்டும் ஆப்கானிஸ்தான் மீது குவிந்துள்ளது.
காலித் ஹூசைனி ஆப்கானிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் வாழுகின்ற ஒரு எழுத்தாளர். இவர் ஒரு மருத்துவரும்கூட. தனது பதினைந்து வயதில் இருந்து அங்கு வசித்து வருகிறார்.
காலித் ஹூசைனி தனது பிறந்த இடத்தை விட்டு 1976ம் ஆண்டில் வெளியேறி இருந்தாலும், ஆப்கானிஸ்தான் நாட்டினதும் அந்த மக்களினதும் மீதான பிணைப்பு மிகவும் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இவர் தனது பெற்றோருடன் 1980ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு வந்தார்.தற்போது வடக்கு கலிபோர்னியாவில் வசிக்கிறார். சில தசாப்தங்களில் கடந்த வாரத்தைத்தான் ஆப்கானிஸ்தானின் இருண்ட நாட்கள் என்று வர்ணிக்கிறார் காலித் ஹூசைனி.
CNN ஊடகத்திற்கு அவர் 21/08/2021 அன்று அளித்த நேர்காணலின் ஒரு சுருக்கிய வடிவம்.
- உங்களுடைய சிறு பிராயத்து காபூல் தலிபான்கள் வசம் மீண்டும் சிக்கியுள்ளதை பார்க்கும்போது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?
அடிவயிற்றில் வலித்தது. ஒரு நாள் காலையில் எழுந்து எனது கைபேசியை திறந்தேன். காபூல் வீழ்ந்துவிட்டது என்பதைக் கண்டேன். நான் ஆப்கானிஸ்தானுக்கு பல தடவைகள் போயிருக்கிறேன். செப்டெம்பர் தாக்குதல், அமெரிக்க ஆக்கிரமிப்பு இவற்றிற்குப் பிறகு அங்கு போனேன். உண்மையிலேயே இது தாங்கொணா வேதனையைத் தருகிறது.
அந்த நாட்டுடனும் மக்களுடனும் எனக்கு மிகவும் வலிமையான உணர்வுரீதியான பந்தம் ஒன்று இருக்கின்றது. நான் 1976ம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் வசிக்கவில்லை. ஆனால் அதற்கு முதலில் அங்கே தான் இருந்தேன். காபூல் நகரத்தில் தலிபான் கொடி பறப்பதைப் பார்க்க தாங்க முடியவில்லை.
- உங்களுடைய அன்றைய நாட்கள் பற்றிய என்ன நினைவுகள் இன்னும் எஞ்சி இருக்கின்றன?
அது எவ்வளவு வித்தியாசமாக இருந்ததென்பதை நம்பவே முடியாமல் உள்ளது. அப்போது தேநீர் கூடங்களில் ஹிப்பிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பொது இடங்களில் புகைப்பிடித்தார்கள்; குட்டைப் பாவாடைகள் அணிந்தார்கள்; காரோட்டினார்கள்; மருத்துவர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் இன்னும் பல்வேறு துறைகளிலும் பணி புரிந்தார்கள். அது ஒரு மிகவும் வித்தியாசமான சமூகம்.
காபூல் செழித்து வளரும் ஒரு நகரமாக இருந்தது. மதக் கொள்கையுள்ள ஒரு பழமைவாத தரத்தின்படி பார்த்தால் அது பரந்த கொள்கையுடையதாக இருந்தது.
40 ஆண்டுகளாக ஒரு சிறுவனாக வசிப்பதற்கு மிக மோசமான இடங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. ஆனால் எனது காலத்தை பொறுத்தவரையில் மிகவும் விரும்பத்தக்க ஒரு பால்ய காலத்தை அங்கு கழித்திருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நான் வாழ்ந்ததற்காக மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன். சோவியத் ஆக்கிரமிப்புக்கு முன்னரான சமாதான காலத்தின் இறுதிக்கட்ட சில வருடங்களையும் ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மையையும் என்னால் காணக்கூடியதாக இருந்திருக்கின்றது. அதன் உச்சக்கட்ட காட்சிகளை நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்தோம்.
- இன்னும் ஆப்கானிஸ்தானில் வசிக்கின்ற உங்கள் உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து நீங்கள் கேள்விப்படுவது என்ன?
நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய பதில் ஒன்றைத்தான் அவர்கள் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, தங்களுடைய பாதுகாப்பு, நாட்டின் எதிர்காலம், கடந்த 20 வருடங்களாக மிகுந்த சிரமத்துடன் பெற்றுக்கொண்ட பல நன்மைகள், உரிமைகள் என்பவற்றிற்கு தலிபான்களின் வருகை என்ன வடிவத்தை தரப்போகின்றது என்பது குறித்துத்தான் தீவிரமான அக்கறை கொண்டிருக்கிறார்கள்.
- 2001ம் ஆண்டில் தலிபான்களின் அதிகாரம் தூக்கி எறியப்பட்டபோது, ஆப்கானிஸ்தான் இந்தத் திசையில் நகரும் என்று உணர்ந்தீர்கள்?
பல்லாயிரம் ஆப்கானிஸ்தானியர்களின் உணர்வுகளை எனது உணர்வுகள் எதிரொலித்தன. தலிபான்கள் சென்றுவிட்டார்கள் என்பது மேம்பட்ட எதிர்காலத்திற்கான ஒரு திறவுகோலாக இருந்தது – நிலையான, மேம்பட்ட, அமைதியான நாட்டை நோக்கி நகரும் என்பதுதான்.
நான் 2003ம் ஆண்டு காபூலில் இருந்தேன். 27 வருடங்களிற்குப் பிறகு நான் அங்கே சென்றிருந்தேன். மிகவும் உருவேறிய ஒரு சூழல் இருந்தது. ஒவ்வொருவரும் வாழ்வதற்கான சாத்தியப்பாடுகளுடன் ஒரு சிறு மயக்கத்தில் இருந்தார்கள். ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கான எந்த ஒரு தடயமும் இருக்கவில்லை. மக்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். அது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு எதிர்மறையாக இன்றுவரை உள்ளது. கடைசி 20 வருடங்களின் இந்தக் கடைசி நாட்கள் தான் மிகவும் இருண்ட நாட்கள். ஒருவேளை 1992 – 1996 ஆண்டிற்கிடையில் நடைபெற்ற சிவில் யுத்தத்தின் பின்னரான நாட்களை பார்க்கும்போது கூட.
- இந்த நம்பிக்கை மீதான உணர்வுகள் எப்போது மாறுவதற்குத் தொடங்கியது? ஆப்கானிஸ்தானை மீண்டும் ஒரு தடவை தலிபான்கள் கைப்பற்றுவார்கள் என்று முன்னதாக உணர்ந்திருந்தீர்களா?
நான் ஆப்கானிஸ்தானில் இருந்தபொழுதில் அங்குள்ளவர்களிடம் பேசியபொழுது அவர்கள் எல்லோருமே ஒரே விதமாகவே தங்களை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்கர்கள் வெளியேறினால் ஆப்கானிஸ்தான் அரசு தங்களை பாதுகாக்கும் என்றோ நாட்டைப் பாதுகாக்கும் என்றோ யாரும் நம்பவில்லை. வருடங்கள் செல்ல செல்ல அந்த எண்ணம் இன்னுமின்னும் உறுதிப்படுத்தப்பட்டது.
பெரும்பாலான ஆப்கானிஸ்தானியர்கள், சர்வதேச ஆயுதப்படைகளின் பிரசன்னம் இல்லாது விடில் தலிபான் போன்ற தீவிரவாதிகளின் கையில் ஆப்கானிஸ்தான் அரசு வீழ்ந்து விடும் என்று கவலை கொண்டிருந்தார்கள். இவ்வளவு விரைவாக வீழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒரு பத்து நாட்களில் தலிபான் கைகளில் நாடு. இப்போது அதுதான் நிலைமை. இது முற்றிலும் பிரமிப்பாக இருக்கிறது.
- ஏனைய வெளிநாட்டு சக்திகள் ஆப்கானிஸ்தானிற்குள் படையெடுத்தார்கள். தங்களுடைய சில பணிகளுக்கு. அவை தோல்வியடைந்தன. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் அதே போலவே நிறைவடைவதென்பது தவிர்க்க முடியாதது தானா? அமெரிக்க ஆயுதப் படையின் தொடர்ந்த பிரசன்னம் ஒரு பொருள் பொதிந்த மாற்றத்தை கொடுத்திருக்கக் கூடுமா?
இலட்சக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்களை போலவே நானும் ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான நடவடிக்கைகளை ஆதரித்தேன். அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் செய்த வணிகத்தில் நியாயமான குறைகள் இருந்தன. பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் நல்லெண்ணத்தையும் அமெரிக்கர்களின் மீதான நம்பிக்கையையும் அழிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால் பெரும்பாலான ஆப்கானிஸ்தானியர்கள் உணர்ந்து கொண்டார்கள், அமெரிக்காவின் பிரசன்னம் என்பது தீவிரவாதிகளின் கையில் நாடு விழுவதற்கு ஒரு தடைக்கல்லாக இருக்கும் என்று.
மறுநாள் ஜனாதிபதி பைடன் உரையாற்றினார். நான் அவரிடம் கேட்க நினைப்பது என்னவென்றால், கடந்த 20 வருடங்களின் பின்னர் நீங்கள் அங்கு எதனை தந்துவிட்டு செல்கிறீர்கள்? இவைகள் எல்லாம் எதற்காக?
அமெரிக்கர்கள் தரப்பில் இருந்து பார்த்தால், அவர்களுடைய நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி அவர்களிடம் திரும்ப கொடுத்தாயிற்று. ஆப்கானிஸ்தானியரின் தரப்பில் பார்த்தால், நாட்டுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையலாம் என்கிற எதிர்பார்ப்பில்….. ஆயிரமாயிரம் பொது மக்கள் இறந்திருக்கிறார்கள். எத்தனையோ மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். எத்தனையோ கிராமங்கள் குண்டுகளுக்கு இரையாகின. எத்தனையோ மக்கள் துன்பத்தை அனுபவித்தார்கள்.
தற்போது அமெரிக்காவினால் தீவிரவாத குழு என்றழைக்கப்பட்ட ஒரு ஒரு குழுவின் தயவில் இருக்கிறார்கள். தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தானிய மக்கள்மீது ஒரு பயங்கர ஆட்சியை திணித்து, ஆப்கானிஸ்தானை தீவிரவாத குழுக்களின் சொர்க்கபுரியாக மாற்றினார்கள். இன்றைய நிலைமை மிகவும் கசப்பான உண்மை. அமெரிக்கர்கள் தங்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக ஆப்கானிஸ்தானியர்கள் உணருவதை யாரும் குற்றம் என்று பழி சுமத்த முடியாது. அது கடினமானது.
- ஆப்கானிஸ்தானிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் உலகநாடுகள் என்ன செய்வதற்கு கடமைப்பட்டிருக்கின்றன?
இனி வரும் நாட்களில், வாரங்களில், மாதங்களில் ஆப்கானிஸ்தானியர்களின் புலப்பெயர்வினை எதிர்பார்க்க முடியும். ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் ஒரு மனிதாபிமான நெருக்கடி நிலவுகின்றது. இந்த ஆரம்ப நாட்களில் மிகவும் முக்கியமாக, நாட்டிற்குள் பிரவேசிக்கக்கூடிய உதவியாளர்களும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் போன்ற உதவி நிறுவனங்களும் அங்கிருப்பவர்கள் உயிர்ப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானிய அகதிகளிற்காக தங்களுடைய நாட்டு எல்லைகளை திறந்து வைக்கும்படி அனைத்து நாடுகளுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். 40 வருட கால வன்கொடுமைகளையும் துன்புறுத்தல்களையும் அனுபவித்துவிட்டு ஓடி வருகின்ற ஆப்கானிஸ்தானியர்களை கைவிடுவதற்கு இது தருணம் அல்ல. ஆப்கானிஸ்தானியர்கள் மீதும் ஆப்கானிஸ்தானிய அகதிகள் மீதும் புறமுதுகு காட்டுகின்ற நேரமல்ல இது.
அமெரிக்க ஆப்கானிஸ்தானியர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நோக்கங்களிற்கு ஒத்துழைத்தவர்கள், அமெரிக்காவின் முன்னெடுப்புகளை நம்பி செயற்பட்டவர்கள் மற்றும் ஏனைய நாட்டு படைகளுடன் பணி புரிந்தவர்கள் போன்றவர்களின் உயிர்கள் பறிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. இந்த மக்களுக்கு நாங்கள் புறமுதுகு காட்டக்கூடாது.
- இந்த முறை தங்களது ஆட்சி வேறுவிதமாக இருக்கும் என்று தலிபான்கள் சொல்வதில் இருந்து நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?
ஏனைய பல ஆப்கானிஸ்தானியர்களை போலத்தான் எனது உணர்வுகளும் உள்ளது. எனக்கு மிகத் தீவிரமான சந்தேகம் உள்ளது. தலிபான்கள் இவற்றை வார்த்தைகளில் சொல்வதை விட்டு செயல்மூலம்தான் நிரூபிக்க வேண்டும் என்று நாங்கள் உணருகிறோம்.
இப்போது முழு உலகின் கவனமும் ஆப்கானிஸ்தான் மேல் குவிந்துள்ளது. எனவே அவர்கள் மனித உரிமைகளுக்கும் பெண்கள் உரிமைகளுக்கும் மதிப்புக் கொடுத்து நடப்போம் என்று சொல்வதில் பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. அவர்கள் மிகவும் அவதானமாகவே சொல்கிறார்கள்- இந்த உரிமைகள் இஸ்லாமிய சட்டத்தின் எல்லைகளுக்குட்பட்டு இருக்கும் என்று. எப்படி இருப்பினும் இது ஒரு திறந்த பொருள்கோடலை விட்டுச் செல்கிறது.
- உங்களுடைய நூல்கள் உலகம் முழுவதும் இருக்கின்ற எத்தனையோ பல வாசகர்களுக்கு ஆப்கானிஸ்தானை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும் மக்களையும் புரிந்து கொள்வதற்கு ஒரு புனைவு என்பது எந்தளவிற்கு ஊட்ட முடியும்?
அது ஒரு சாளரம். அது ஒரு தனி மனிதனின் அனுபவப் பயணம். மக்கள் எனது புத்தகங்களை வாசித்து ஆப்கானிஸ்தான் மீதும் அங்குள்ள மக்களின்மீதும் ஒருதனிப்பட்ட உறவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாவேன்.
ஏனென்றால் ஆப்கானிஸ்தான் பல வருடங்களாக தலிபான், யுத்தம், தீவிரவாதம், போதைப்பொருள் வணிகம் என்பவற்றுடன் முதன்மையாக இணைந்திருந்தது. என்னுடைய புத்தகங்களில் இருந்து, இந்த எண்ணத்தில் இருந்து விலகி மிகவும் நுணுக்கமானதும் சிக்கலானதுமான ஒரு புரிதலுக்கு வருவார்கள் என்று எண்ணுகிறேன்.
அதாவது, நான் என்னை ஒரு ஆப்கானிஸ்தானின் பிரதிநிதியாகக் காணவில்லை. நான் ஆப்கானிஸ்தான் மக்களைப் பற்றித்தான் ஆழமான கரிசனை கொண்டுள்ளேன். அங்கு என்ன நடக்கின்றது என்பது குறித்தும் ஆழமான அக்கறை இருக்கிறது. ஆனால் நான் புகலிடத்தில் மிக மிக நீண்ட காலம் வசித்திருக்கிறேன். எனது நாவல்கள் ஆப்கானிஸ்தான் பற்றி தெரிந்து கொள்வதற்கான ஒரு ஆரம்பப் புள்ளி என்று எண்ணுகிறேன். ஆனால் அதுவே அதன் இறுதியாக இருக்கக் கூடாது.
- தற்போது வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஏனைய ஆப்கானிய எழுத்தாளர்கள் யார்?
ஃபரிபா நவா (Fariba Nawa), இவர் ஒரு பத்திரிகையாளர். பிரமிக்க வைக்கும் ஒரு எழுத்தாளர். Opium Nation: Child Brides, Drug Lords and One Woman’s Journey through Afghanistan என்னும் நூலின் ஆசிரியர். இது ஒரு நினைவுக்கு குறிப்பு. ஆப்கானிஸ்தானின் பெண் குழந்தை திருமணம், அபின் வர்த்தகம் என்பன குறித்தும், கடந்த சில 30 வருட ஆப்கானிஸ்தான் குறித்த ஒரு பார்வையையும் தருகின்றது.
ஆப்கானிஸ்தான் வரலாற்றை மட்டுமல்ல. புகலிடத்தில் வாதிக்கின்ற ஆப்கானியர்களையும் பற்றி புரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நான் தமீம் அன்சாரியின் West of Kabul, East of New York என்கிற நூலை பரிந்துரைப்பேன்.
- இந்த நேரத்தில் ஆப்கானியர்களில் எந்த வகையினரின் குரல்கள் கணக்கெடுக்கப்படவில்லை?
என்னுடைய மிக தீவிரமான கவலை என்னவென்றால் பெண்களின் குரல்கள் கவனயீர்ப்பில்லாமல் போகப் போகிறது என்பதுதான். தொண்ணூறுகளில் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் பொறுப்பில் இருந்தபொழுது, பிரதானமாக பெண்கள் சமூக வாழ்க்கையின் எந்த வெளியிலும் பங்குபற்றுவதை தடுத்தார்கள். இந்த கிரகத்திலேயே ஒரு பெண்ணாக வாழ்வதற்கு மிக மோசமான இடம் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
தற்போது தலிபான்கள் சரியாக விடயங்களை சொல்கிறார்கள். ஏனைய ஆப்கான் மக்களின் குரலாக சொல்கிறேன். அங்குள்ள பெண்களின் குரல்கள் அடங்கிவிடாது என்று நான் நம்புகிறேன். அவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். மிகவும் நெகிழ்வானவர்கள். சமயோசித புத்தி உள்ளவர்கள். நான் அவர்கள் மீது அளவு கடந்த மதிப்பு வைத்திருக்கிறேன்.
- ஆப்கானிஸ்தான் பற்றி மக்கள் எதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
அவர்கள் யுத்தத்தினால் அயர்ச்சியடைந்து போயிருக்கும் ஒரு மக்கள் கூட்டம். அவர்கள் களைத்துப் போனார்கள். அவர்கள் முற்றிலுமாக சோர்வடைந்து போனார்கள். 40 வருடங்கள் கொந்தளிப்புகள், இடப்பெயர்வு, ஒன்றுக்குப் பின் ஒன்றாக நெருக்கடிகள் எல்லாவற்றையும் கடந்து வந்திருப்பவர்கள்.
நான் அனைத்து மனிதர்களிடமும் கேட்பது என்னவென்றால் இன்றை இந்த சலசலப்பு ஓய்ந்த பின் அவர்களை கைவிட்டு விடாதீர்கள். பல்லாயிரக்கணக்கான அந்த மக்கள் இன்னும் அங்குதான் இருப்பார்கள்.
கடந்த 20 வருடங்களாக அமெரிக்கா ஆப்கானிஸ்தானை தங்களது பங்காளிகள் என்று சொன்னார்கள். தற்போது அவர்கள் வெளியேறினார்கள். அந்த நாட்டை 20 வருடங்களாக திட்டமிட்டு கொடுமைப்படுத்தி, பயங்கரவாதத்தால் ஆண்ட ஒரு குழுவின் தயவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் தற்போது இருக்கிறார்கள்.
வன்கொடுமைகளில் இருந்து தப்பி ஒரு பெரிய கூட்டமாக எல்லைகளை நோக்கி ஓடி வருவார்கள். இதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம். இதற்கான சாத்தியம் பெருமளவில் உள்ளது. இவர்கள் வேறு ஒரு நாட்டுக்குள் செல்வதற்கு அகதி உரிமை பெறுவதற்கான சகல வளங்களையும் கொடுத்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே அந்த அமைப்புகளிற்கு, அவர்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களின் நலன்களை பேணுகின்ற அமைப்புகளிற்கு உதவுங்கள்.