வவுனியா மாவட்ட புதிய அரசஅதிபராக பௌத்த சாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ.சரத் சந்திர இன்று பதவியினை பொறுப்பேற்றார்.
வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேன வடமாகாண பிரதம செயலாளராக ஜனாதிபதியினால் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் நியமிக்கப்பட்டிருந்தார். தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த நியமனத்திற்கு கூட்டாக எதிர்ப்பு தெரிவித்தன. நிர்வாக மூப்புள்ள வடக்கு அதிகாரிகள் புறந்தள்ளப்பட்டு, அவர் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கடந்த ஒரு மாத காலமாக பதில் அரச அதிபராக பொறுப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் பௌத்தசாசன அமைச்சில் முக்கிய பதவியினை வகித்த பி.ஏ.சரத்சந்திர வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதகுருமார்கள், பிரதேச செயலாளர்கள்,மாவட்டச்செயலகத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.