கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 74 வயதான மூதாட்டியை உறவினர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காததால், மூன்று நாட்களாக வீட்டிற்கு வெளியில் தங்கியுள்ளார்.
பல்லேவெல, நுங்கமுவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலுள்ள உறவினர்கள் உணவு, நீர் எதுவும் வழங்க மறுத்துள்ள நிலையில், அயலவர்களின் உதவியுடன் அவர் நாட்களை கடத்தி வருகிறார்.
அந்தப் பெண், தன் சகோதரனுடன் நீண்ட காலமாக இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அண்மையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மீரிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பின்னர் வெள்ளவத்தை சிகிச்சை மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
பத்து நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு, 21 ஆம் திகதி இரவு தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும், அவரது சகோதரன் வீட்டு கதவை திறந்து, அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, வீட்டின் வெளிப்புற படிக்கட்டிலேயே அவர் தங்கியுள்ளார்.
வெள்ளவத்தை சிகிச்சை மையத்தில் தான் அணிந்திருந்த ஆடைகளைத்தான் இன்னும் இருப்பதாகவும், ஒரு ஆடையை எடுப்பதற்கு அறைக்கு செல்லக்கூட சகோதரன் அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அவரது மகள் கந்தலாம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணிபுரிந்து வருவதாகவும், ஊரடங்கு காரணமாக அவரால் தாயார் இருக்குமிடத்திற்கு செல்ல முடியவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் விடயத்தில் தலையிட்டு, மூதாட்டியை வீட்டுக்குள் அனுமதிக்கும்படி சகோதரனை அறிவுறுத்தினர். எனினும், அவர் மறுத்து விட்டார்.