25.8 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இந்தியா

ஆர்யா என நினைத்து ஆசாமியின் காதல் வலையில் வீழ்ந்தாரா இலங்கைப் பெண்?

நடிகர் ஆர்யாவைப்போல நடித்து ஜேர்மனியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான இளம் பெண் வைத்தியரிடம் பணத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

நடிகர் ஆர்யா, தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 70 இலட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக ஜேர்மனியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான இளம் பெண் வைத்தியர் வித்யா, சில மாதங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் அலுவலகத்துக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி தமிழக அரசுக்கு வைத்தியர் வித்யாவின் மனு அனுப்பிவைக்கப்பட்டது. உடனடியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நடிகர் ஆர்யாவிடம் புகாரளித்திருப்பதால் இந்தப் புகாரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு மத்திய குற்றப்பிரிவு, சி.பி.சி.ஐ.டி போலீஸ் எனப் புகார் மனு இழுத்தடிக்கப்பட்டதால் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை.

அதன் பிறகு, வைத்தியர் வித்யாவிடம் பொது அதிகாரம் பெற்ற சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. அதனால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

அந்தத் தகவல் நீதிமன்றத்திலும் அறிக்கையாகச் சமர்பிக்கப்பட்டது. இந்தச் சூழலில்தான் ஆப் மூலம் நடிகர் ஆர்யாவைப்போல நடித்து ஜெர்மனி பெண் வைத்தியர் வித்யாவை ஏமாற்றிப் பணம் பறித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இருவரைக் கைதுசெய்திருக்கின்றனர்.

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், “சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் என்பவர் சமூக வலைதளம் மூலம் பெண் வைத்தியரிடம் நடிகர் ஆர்யா என அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் அவர், பெண் வைத்தியரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பணத்தையும் பறித்திருக்கிறார். அதற்கு உடந்தையாக முகமது அர்மானின் மைத்துனர் முகமது ஹூசைனி பையாக் என்பவரும் இருந்திருக்கிறார். இருவரையும் ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் வைத்து கைதுசெய்திருக்கிறோம்.

ஜெர்மன் பெண் வைத்தியர் இவர்கள் இருவரின் வங்கிக் கணக்குக்குத்தான் பணத்தை அனுப்பியிருக்கிறார். இருவரிடமிருந்தும் இரண்டு செல்போன்கள், லப்ரொப், ஐ பாட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர்.

எனினும், பெண் வைத்தியர் தரப்பில் பேசியவர்கள், “நடிகர் ஆர்யாவைப்போல நடித்து பெண் வைத்தியரை ஏமாற்றியதாக முகமது அர்மான், முகமது ஹூசைனி பையாக் ஆகியோரைப் போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள்தான். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், முகமது அர்மான், முகமது ஹூசைனி ஆகியோருக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதுபோல தகவல் இருக்கிறது. மேலும், ஜெர்மன் வைத்தியர் புகார் அளித்த பிறகும்கூட நடிகர் ஆர்யா, முகமது அர்மான், முகமது ஹூசைனி ஆகியோர் தன்னுடைய பெயரில் ஏமாற்றுவது குறித்து புகாரளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்குக்குத் தேவையான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம்” என்றனர்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வித்யா தரப்பு வழக்கறிஞர் ஆனந்தன், ;வித்யாஜெர்மனி குடியுரிமை பெற்றவர். அவரின் பெற்றோர், இலங்கைத் தமிழர்கள். ஜெர்மனியில் வித்யா, முதன்மை இதயவியல் நிபுணராகப் பணியாற்றிவருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஆர்யாவின் சமூக வலைதளப் பக்கம் மூலம் அவருடன் வைத்தியர் வித்யா பழகியிருக்கிறார். அதன் பிறகு நடிகர் ஆர்யாவும் வைத்தியர் வித்யாவும் காதலித்திருக்கின்றனர். நடிகர் ஆர்யாவுக்குப் பணத் தேவை ஏற்பட்டபோது வித்யா, ஜெர்மனியிலிருந்து Western Union, Moneygram and Ria Travels ஆகியவை மூலம் 70.38 இலட்சம் வரை பல கட்டங்களாக அனுப்பிவைத்திருக்கிறார். இருவரும் வாட்ஸ்அப்பில் மணிக்கணக்கில் சாட்டிங் செய்திருக்கின்றனர். அதை பிரின்ட் எடுத்தால் 130 பக்கங்கள் வரும்.

2018ஆம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் வித்யாவும் நடிகர் ஆர்யாவும் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பிவந்துள்ளனர். நடிகர் ஆர்யாவும், அவரின் அம்மாவும் வீடியோ காலில் பேசும்போது வித்யாவைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கின்றனர். நடிகர் ஆர்யாவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியைக் கூறி வித்யாவிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்தப் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகவும் கூறியிருக்கிறார். அதை நம்பி 2018ஆம் ஆண்டில் பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் நடிகர் ஆர்யா வித்யாவை திருமணம் செய்துகொள்ளாமல், நடிகை சாய்ஷாவை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்“ என்றார்.

இந்த நிலையில் நேற்று (25) காலை, கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடிகர் ஆர்யாவின் வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப்

அப்போது அவர் கூறுகையில், “ஆர்யா பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடி செய்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தப் புகாருக்கும் ஆர்யாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கைதான இருவரும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். பணப் பரிவர்த்தனை நடந்த வங்கிக் கணக்கு மூலம் குற்றவாளிகள் கைதாகியிருக்கிறார்கள்.

ஆனால், உண்மைநிலை தெரியும் முன்பாகவே நடிகர் ஆர்யா மீது மோசமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டன. அப்படி விமர்சனம் செய்தவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யவிருக்கிறோம்” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

Leave a Comment