உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் பிற முக்கிய தாதுக்கள், புரதங்களைப் பெறுவதற்கான முக்கிய ஆதாரம் பால் தான். பாலில் பல்வேறு வகையான இனிப்புகள், சுவையான உணவுகள், தேநீர், காபி போன்ற பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதிலும், தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு பசும் பால் முக்கிய ஆதார உணவாக உள்ளது. தற்போது மாறிவரும் கால சூழ்நிலையில், சோயா, பாதாம், ஓட்ஸ், முந்திரி போன்ற பல்வேறு வகையான பால் அல்லாத மாற்று வகை பால்கள் சந்தையில் காணப்படுகின்றன. தற்போது இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பது தான் இந்த உருளைக்கிழங்கு பால்.
உருளைக்கிழங்கு பால் என்றால் என்ன ?
மற்ற பால் போலல்லாமல் உருளைக்கிழங்கு பால் பசையம் இல்லாதது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. ஏனெனில், அங்கு உருளைக்கிழங்கு பால் சந்தையில் எளிதில் கிடைக்கிறது.
உருளைக்கிழங்கு பாலின் நன்மைகள்
நிபுணர்களின் கூற்றுப்படி உருளைக்கிழங்கு பால் விற்றமின் டி மற்றும் பி 12 இன் சிறந்த ஆதாரம் ஆகும். அதோடு உருளைக்கிழங்கு பாலில் விற்றமின் ஏ, சி, டி, ஈ மற்றும் கே போன்றவையும் தாதுக்களும் நிறைந்துள்ளன. இதில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச் சத்து பசும் பால் உள்ளது போன்றே இருக்கிறது. ஒவ்வாமை இல்லாதவர்களுக்கு, உருளைக்கிழங்கு பால் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் பால் போலவே இருக்கும். இந்த உருளைக்கிழங்கு பால் கொழுப்பு இல்லாதது.
பாதாம் பால்
பாதாம் பாலுடன் ஒப்பிடுகையில் உருளைக்கிழங்கு பால் குறைந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்துவதாகவும், ஓட்ஸ் வளர்ப்புடன் ஒப்பிடுகையில் நிலத்தின் பாதி அளவு மட்டுமே பயன்படுத்துவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இதுமட்டுமின்றி, பால் பண்ணையை விட குறைவான கார்பன் டை ஆக்சைடு மட்டுமே இதன் மூலம் உற்பத்தி ஆகிறது. இருப்பினும், நீரிழிவு நோய் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் மற்றும் டிஸ்ஸ்பெசியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருளைக்கிழங்கு பால் சிறந்தது என்பதை நிரூபிக்க உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டிலேயே உருளைக்கிழங்கு பால் செய்வது எப்படி ?
நீங்கள் வெறும் ஐந்து பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே உருளைக்கிழங்கு பால் தயாரிக்கலாம். அது எப்படி எனில், 3 கப் தண்ணீரில், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து உருளைக்கிழங்கை வேகவைக்கவும். வேக வைத்த பின் அதனை உரித்து மசிக்கவும். பின்பு அதனுடன் தண்ணீர், 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், ஒரு கப் பாதாம், 2 தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும். உருளைக்கிழங்கு மிருதுவான கூழ் ஆகும் வரை கலக்கிக் கொள்ளவும். பின் அதனை வடிகட்டிக் கொண்டால் போதும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு பால் ரெடி. இதை நீங்கள் உங்களின் காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.