80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 60 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் மு.கருணாநிதி. மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து முதலமைச்சர் பேசியதாவது:
கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும். இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது. 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர் கருணாநிதி. 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர். தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை. கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் நிரந்தர தலைப்புச்செய்தியாக இருந்தவர் கருணாநிதி. 80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 60 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் மு.கருணாநிதி. இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.