26.3 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

பேரினவாதச் சேற்றில் மலர்ந்த ஒரு வெண்தாமரை மங்கள சமரவீர: தமிழ் தேசிய பசுமை இயக்கம் அஞ்சலி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்தமைக்குச் சிங்களவர்கள் காரணமே தவிர தமிழர்கள் அல்லர். ஆரம்ப காலத்தில் தமிழர்கள் மொழியுரிமை கேட்டார்களே தவிர
தனிநாட்டைக் கோரவில்லை. மொழியுரிமை உரியவாறு வழங்கப்படாத நிலைமையிலேயே அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தார்கள் எனத் தெரிவித்ததன் மூலம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை
வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட மங்கள சமரவீர பேரினவாதச் சேற்றில் மலர்ந்த ஒரு வெண்தாமரை என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன்
தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவையொட்டி பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள இரங்கற்செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரங்கற் செய்தியில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

மங்கள சமரவீர பிற்காலத்தில் தேர்தல் அரசியலில் இருந்து விலகி கட்சி அரசியலைத் தாண்டி கொள்கை ரீதியான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். இக்காலப்பகுதியில் தன்னைத்தானே சுயபரிசீலனை செய்பவராக விளங்கிய இவர், நாடு
தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இருந்து தான் உட்பட அனைத்து அரசியல் வாதிகளும் அரசாங்கங்களும் இனவாதத்தை ஆதரித்த வாக்காளர்களும் பொறுப்புக்கூற வேண்டும்; அரசாங்கம்,
எதிர்க்கட்சி, பேரினவாதம் உள்ளிட்ட அனைத்துமே தோல்வியடைந்து விட்டது என்ற முடிவுக்கு வந்திருந்தார்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை முழுமையாகத் தோல்வியடைந்திருக்கின்றது. இது தற்போது தென்னிலங்கை
அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களை மாத்திரமே வழங்கக்கூடிய வெள்ளை யானையாக மாறியிருக்கின்றது என்று தெரிவித்த மங்கள சமரவீர தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் இதயசுத்தியுடன்
உழைத்தவர் ஆவார். சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது முன்னெடுத்த புதிய அரசியல் யாப்பை சிங்கள மக்களை ஏற்றுக்கொள்ள வைக்க வெள்ளைத் தாமைரை
இயக்கத்தினூடாகக் கடுமையாக உழைத்திருந்தார்.

தற்போதைய அரசாங்கம் ஏனைய பலம்வாய்ந்த சக்திகளைப் புறந்தள்ளிச் சீனாவுடன் மாத்திரம் நெருங்கிப் பயணிப்பதால் வருங்காலத்தில் பூகோள அரசியல் நெருக்கடிக்கு

முகங்கொடுக்கவேண்டி நேரிடும் என்று எச்சரித்த மங்கள சமரவீர சீனாவுடனும் இந்தியாவுடனும் இலங்கை சமாந்தரமான நெருக்கத்தைப் பேணுவது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டி வந்தார். நாடு பேரினவாதச் சகதியிலும் கொரோனாவின்
கோரப்பிடியினுள்ளும் சிக்கித்தவிக்கும் நிலையில் மங்கள சமரவீரவை கொரோனா பலிகொண்டிருப்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் பெரும் இழப்பாகும்.

அன்னாரின் ஆத்மா இயற்கை அன்னையின் மடியில் சாந்தியடையட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன?: டக்ளஸ் கேள்வி!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிவின் நன்கொடை

east tamil

எலிக்காய்ச்சலால் வளர்ப்பு மிருகங்களும் பாதிக்கப்படலாம்!

Pagetamil

முள்ளிவாய்க்காலில் 103 ரோஹிங்கியா அகதிகளுடன் கரையொதுங்கிய படகு!

east tamil

Leave a Comment