பால்மாவை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவரிடம் நியாயம் கேட்ட ஒருவர், வர்த்தகரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவின் விபுலானந்தா வீதியில் இந்த சம்பவம் நடந்தது.
கடந்த 19ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.
55 வயதான ஒருவர் பால்மா வாங்க கடைக்கு சென்றுள்ளார்.
“இரவு 8.30 மணியளவில் வர்த்தக நிலையத்திற்கு சென்று பால்மா கேட்டேன். அங்கு பால்மா பதுக்கி வைக்கப்பட்டு, இரகசியமாக, அதிகரித்த விலையில் விற்கப்பட்டு வந்தது. பால்மா நிறுவனத்தின் பிற உற்பத்திகளையும், பால்மாவையும் 600 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டும். அல்லது பால்மாவை 600 ரூபாவிற்கு வாங்க வேண்டுமென வர்த்தகர் தெரிவித்தார்.
ஒரு பால்மாவின் விலையை குறிப்பிட்டு, அவரது அதிகரித்த விலையை சுட்டிக்காட்டினேன். ஒரு பால்மா பைக்கற் மட்டுமே தேவையென அவர்களிடம் தெரிவித்தேன். அப்படி தர முடியாதென்றார்கள்.
அதிகரித்த விலை தொடர்பாக நான் சுட்டிக்காட்டியதையடுத்து, வாக்குவாதம் ஏற்பட்டு, வர்த்தகரும், தம்பியும் என்னை தாக்கினார்கள். தும்புத்தடியினால் என்னை கடுமையாக தாக்கினார்கள்.
வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 21ஆம் திகதி மாலை வீடு திரும்பினேன். சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த போது இன்னும் சிலர் வர்த்தக நிலையத்தில் நின்றனர். அவர்களில் சிலர் பால்மா வாங்க வந்தவர்கள். அவர்கள் அதிகரித்த விலையில் பால்மா வாங்க தயாராக இருந்தார்கள். என்னைப் போல அவர்களும் அறாவிலையை சுட்டிக்காட்டி, பால்மாவை வாங்காமல் விட்டு விடலாமென்ற அச்சத்திலேயே கடைக்காரர் அப்படி நடந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன்.
நாளை புதன்கிழமை இந்த விடயம் தொடர்பான விசாரணை பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும். அன்றைய தினம் பொலிசார் என்னையும் அழைத்துள்ளனர்“ என்றார்.