ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் அணிகளிற்கிடையிலான ஒருநாள் தொடர், இலங்கையில் இடம்பெறாது. அந்த தொடர் பாகிஸ்தானிலேயே இடம்பெறும் என்பதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் ஹம்பாந்தோட்டையில் நடக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தற்போது பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து காபூலில் இருந்து வணிக விமானங்கள் எதுவும் புறப்படுவதில்லை. அத்துடன், இலங்கையில் அதிகளவான கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றுக்கள் பதிவாகுவதுடன், லொக் டவுனும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சவால்களைவிட, ஆப்கான் அணியில் பயணச் சவாலே தொடர் இடமாற்றப்பட முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி தரைவழி பயணம் மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். பின்னர் டுபாய்க்கு விமானப்பயணம் மேற்கொள்ள வேண்டும், பின்னர் கொழும்புக்கு செல்ல வேண்டும். ஆனால் இந்த சுற்றுப்பாதையில் பயணிப்பதில் கோவிட் -19 நெறிமுறைகள் காரணமாக சவால்களை எழுப்புவதாக ஆப்கான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய திட்டத்தின்படி, ஆப்கானிஸ்தான் அணி இந்த வார இறுதியில் பாகிஸ்தானுக்கு பயணிக்கும். செப்டம்பர் 03 ஆம் திகதி தொடங்கும் ஒருநாள் போட்டிக்கான இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தான்- பங்களாதேஷ் தொடர் முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெற திட்டமிடப்பட்டது. பின்னர் அந்த தொடரை பாகிஸ்தானில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் விரும்பியது. எனினும், ஆப்கான் கிரிக்கெட் நிர்வாகம் அதை மறுத்திருந்தது.
அதன்பின், இலங்கையில் தொடர் திட்டமிடப்பட்டது. தற்போது, பாகிஸ்தானில் ஆட ஆப்கான் நிர்வாகம் இணங்கியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இருதரப்பு தொடர் இதுவாகும்.
ஆப்கானிஸ்தான் அணியின் 17 பேர் கொண்ட குழு கடந்த வாரம் காபூலில் பயிற்சியை ஆரம்பித்திருந்தது.