ரெஸ்லா நிறுவனம், அதன் மனித இயந்திரத்தின் தொடக்க மாதிரியை அடுத்த ஆண்டு வெளியிடலாம் என்று தெரிவித்துள்ளது.
‘Tesla Bot’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திரம், மனித உருவத்தில் இருக்கும்.
ஆபத்தான வேலைகள், மீண்டும் மீண்டும் ஒரே மாதிரிச் செய்யக்கூடிய, சலிப்பான, மனிதர்களுக்குப் பிடிக்காத வேலைகள் ஆகியவற்றைச் செய்வதற்காக அது உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலன் மாஸ்க் கூறினார்.
சுமார் 172 சென்டிமீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அதனால், கடைக்குச் சென்று காய்கறிகள்கூட வாங்க முடியுமாம்.
அதன் மூலம் ஊழியர் பற்றாக்குறை பிரச்சினையைக் கையாள முடியும் என்று சொன்ன மாஸ்க், அது மிகவும் விலை அதிகமாக இல்லாமல் இருப்பது முக்கியம் என்றார்.
எனினும், சொன்னதுபோல் அத்தகைய மனித இயந்திரத்தை மாஸ்க் வெளியிடுவாரா எனச் சிலர் கேள்வி எழுப்பினர்.
மாஸ்க், இதற்கு முன்னரும் சிலதடவைகள், பெரிய அளவிலான திட்டங்களை அறிவித்துவிட்டு, பின்பு பின்வாங்கியிருக்கிறார்.
இந்த ஆண்டு வெளியாக இருந்த, பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த Cybertruck வாகனத்தின் வெளியீடு காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.