பாகிஸ்தான் இராணுவக் கட்டுப்பாட்டில் தலிபான் தலைவர் ஹைபத்துல்லா அகுன்சதா இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலிபான்களின் முக்கியமான தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹைபத்துல்லா அகுன்சதாவின் இருப்பிடம் குறித்து இந்தியா மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்தது.
இந்நிலையில், அகுன்சதா பாகிஸ்தான் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என இந்தியா கணிக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தானின் ஆட்சி தலிபான்கள் வசம் சென்றுள்ளதை பாகிஸ்தான் எவ்வாறு கையாளும் என்பதையும் இந்தியா தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
ஹைபத்துல்லா அகுன்சதா 2016இல் தான் தலிபான் தலைவராக நியமிக்கப்பட்டார். அதுவரை தலைவராக இருந்த அக்தார் மன்சூர் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் இறந்த நிலையில் அகுன்சதாவுக்கு இந்தப் பதவி வந்து சேர்ந்தது. 50 வயதான அகுன்சதா சட்ட மேதையாக தலிபான்களால் அறியப்படுகிறார். நம்பிக்கைக்குரிய போர்வீரர் என்றே அவரை தலிபான்கள் அழைக்கின்றனர். முன்னதாக இந்த அடைமொழி அய்மான் அல் ஜவாஹிரிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானை வழிநடத்தத் தகுதியானவர்கள் என்றறியப்பட்டுள்ள 7 பேரில் அகுன்சதாவும் ஒருவராக இருப்பதாலேயே அவர் மீது இந்தியா தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையில், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தலிபான்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
தலிபான்கள் வேண்டுகோள்:
முன்னதாக ஐ.நா பாதுகாப்புக்குக் கவுன்சில் ஆலோசனைக் கூட்டமொன்றில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், லஷ்கர், ஜெய்ஷ் போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு சில நாடுகள் அடைக்கலம் கொடுத்து உபசரிப்பு செய்கின்றன என்று பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் சாடியிருந்தார்.
தலிபான்கள் ஆட்சி குறித்து இந்தியா பல்வேறு வகையிலும் கண்காணித்து வர, கத்தாரில் செயல்படும் தலிபான்களின் அரசியல் அலுவலகமோ இந்தியா காபூலில் இருந்து தனது தூதரகத்தை காலி செய்ய வேண்டாம் என்று கோரி வருகிறது. தலிபான்களோ அல்லது லஷ்கர், ஜெய்ஷ் அமைப்பினரோ இந்திய தூதரகத்துக்கோ தூதரக அதிகாரிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படுத்த மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும், இத்தகைய குழுக்களால் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியா தூதரகத்தை காலி செய்துவருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர். இருப்பினும் ஆப்கனில் இன்னமும் இந்தியர்கள் பலர் பல்வேறு நகரங்களில் சிக்கியிருப்பதாகவும் அவர்களின் விவரங்களைச் சேகரித்து அவர்களை ஒருங்கிணைத்து மீட்பதில் சிக்கல் நிலவுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



