சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை நேற்று (19) முற்பகல் சந்தித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக முறையிட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக தமக்கு எதிராக இடம்பெறும் விசாரணைகள் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும், தமக்கு எதிரான நடவடிக்கைகயை இடைநிறுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென மகாநாயக்கரிடம், பொலிஸ் அதிகாரிகள் கோரினர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், நிர்வாக செயற்பாடுகளிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க, மொனராகலை பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார ஹேரத், நுவரெலியாவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் சந்தன அத்துகோரள, முல்லைத்தீவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவான் குமாரசேகர உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் நேற்று சந்திப்பிற்கு சென்றனர்.
”புலனாய்வு தகவல்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கமோ, பாதுகாப்பு அமைச்சோ பொலிஸ் அதிகாரிகளிற்கு அறிவுறுத்தியிருக்கவில்லை. யுத்தத்தின் பின் மிகவும் அமைதியான, நல்லிணக்கம் என்ற கோட்பாடே அரசாங்கத்தால் முன்னிலைப்படுத்தப்பட்டது.
குறிப்பாக முஸ்லிம் மக்களுடன் நெருங்கிய தொடர்பிருந்ததால், பயங்கரவாத அமைப்புக்கள் குறித்து ஆழமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டில் ஒரு முழுமையான அமைதி நிலவியது. அந்த நேரத்தில் நடந்த, இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தால் நாடு சுமார் 300 அப்பாவி உயிர்களை இழந்தது.
பொலிஸ் அதிகாரிகள் இந்த தாக்குதலிற்கு ஒத்துழைக்கவில்லை. அந்த சமயத்தில் பொறுப்புக்களை வகித்தார்கள் என்பதால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைப்குழு எம்மை விசாரணைக்கு பெயரிட்டது. இது அந்த அதிகாரிகளிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி இந்த அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், அவர்களின் ஓய்வுக்காலம் ஓய்வூதியம் என்பன சிக்கலாகும்.
பயங்கரவாத தாக்குதலிற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்களிக்காத இந்த அதிகாரிகள், அந்த பகுதியில் கடமையிலிருந்தமைக்காக அவர்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுமானால் எதிர்காலத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்றார்.
மொனராகலை பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார ஹேரத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“தலதா மாளிகையின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது உயிர் சேதம் ஏற்பட்டது. ஜயசிறி மகா போதி மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது உயிர்ச் சேதம் ஏற்பட்டது. உலகில் இதுபோன்ற எண்ணற்ற தாக்குதல்கள் நடக்கின்றன. உயிரிழப்பு ஏற்படுகிறது. எனினும், உலகில் எங்குமே, அந்த நேரத்தில் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு எதிராக இதுபோன்ற முடிவு எடுக்கப்படவில்லை.அநியாயம் செய்யப்படவில்லை. இது அநீதியானது. இதை சொல்ல எவருமில்லை. எங்கும் சட்டமில்லை. இதை சொல்ல எமக்கு அதிகாரமில்லை. நாம் எமது தேரர்களிடம் சொல்ல முடியும். தலதா பெருமானிடம் கூற முடியும்.
எனக்கு அருகிலுள்ள சந்தன அத்துகோரள அன்று நீர்கொழும்பு வலயத்திற்கு பொறுப்பாக இருந்தார். இன்று நுவரெலியாவிற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர். இன்னும் 3 நாளில் ஓய்வுபெறுகிறார். ஓய்வூதியமின்றி, சம்பளமின்றி, தொழிலின்றி வீட்டுக்கு போகிறார்கள்.
இதேபோல எனது பிரதிப்பொலிஸ்மா அதிபர் கண்ணீருடன் இருக்கிறார். இது இறுதித்தருமணம். இதை யாரிடம் போய் சொல்வதென யோசித்து ஒன்றுகூடினோம்.
தாக்குதல் எச்சரிக்கை பற்றி எமது உயரதிகாரிகளிற்கு தகவல் கிடைத்து, ஓரிரு நாட்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை யார் மீதாவது சுமத்தி, இந்த 20, 30 பொலிஸ் அதிகாரிகளை சிறைப்பிடிக்க தயாராகிறது.
வழக்கு தொடரப்பட்ட பின்னர் இதை பேசி பலனில்லை. வழக்கு தொடரப்பட்ட பின்னர் சகலரும் தொழில் இழப்பர். எமக்கு சம்பளம் இல்லாமல் போகும். அப்போது எமக்கு ஒன்றும் சொல்ல முடியாமல் போகும்“ என்றார்.