நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் கோவிட் -19 நோயாளிகளினால் மருத்துவமனைகள் நிறைந்துள்ளன. இவர்களில் பலர் ஆபத்தான டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது, இந்த நிலையில், நெருக்கடியான இந்த சூழலை சமாளிக்க விட்டிலிருந்தே சிசிக்சை பெறும் நடைமுறை நேற்று (19) மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொற்று அறிகுறியுள்ளவர்கள், சந்தேகத்திற்கிடமானவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லாமல், புதிய திட்டத்தின் கீழ் குறுந்தகவல் முறையை கையாள கோரப்பட்டுள்ளனர்.
இதற்காக 1904 என்ற இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ஏ,பி,சி என மூன்று வகையாக நோயாளிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். கடுமையான மூச்சு சிரமம் உள்ளவர்கள் A பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல் உள்ளவர்கள் B பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அறிகுறியற்றவர்கள் C பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எந்த வகையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார் என்பதை பொறுத்து குறுந்தகவலில் அந்த எழுத்தை (A/B/C) பதிவு செய்து, ஒரு இடைவெளி விட்டு, வயதை பதிவு செய்து, ஒரு இடைவெளி விட்டு, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்து, ஒரு இடைவெளி விட்டு வயதை குறிப்பிட்டு, 1904 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
A பிரிவில் வகைப்படுத்தப்பட்டவர்களை இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) மருத்துவர்கள் அணுகுவார்கள். சுகாதார அமைச்சின் ஆதரவுடன் அவர்களை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். இந்த நோயாளிகளை ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல இராணுவ ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும்.
அறிகுறிகளைக் கொண்ட ஆனால் சுவாசக் கஷ்டம் இல்லாத நோயாளிகள், பி பிரிவில் வகைப்படுத்தப்படுவார்கள். அவர்கள் எந்த மருத்துவமனை அல்லது இடைநிலை சிகிச்சை மையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற செய்தியைப் பெறுவார்கள். தொடர்புடைய சுகாதார அதிகாரிகள் வந்து, நோயாளியை பரிசோதிப்பார்கள். நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா, இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற வேண்டுமா அல்லது வீட்டில் சிகிச்சை அளிக்கலாமா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவைப்பட்டால், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
அறிகுறியற்ற நோயாளிகள் C பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA )மருத்துவர்கள் தொடர்பு கொள்வார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வழிகாட்டல் வழங்கப்படும்.
நேற்றுக் காலை இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் செய்திகள் 1904 என்ற ஹொட்லைனில் கோவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தால் (NOCPCO) பெறப்பட்டு, அதற்கேற்ப நோயாளிகள் வகைப்படுத்தப்பட்டனர்.
நேற்று மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், அடுத்த வார தொடக்கத்தில் மற்ற மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.