தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 44 பேருக்கு சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது!
சிறந்த பள்ளி ஆசிரியர்களை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதற்காக ஆசிரியர் பணியில் இருந்து, இந்திய நாட்டிற்கே குடியரசு தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறார். இந்த நல்லாசிரியர் விருதையும் அவரின் பெயரிலேயே மத்திய அரசு வழங்குகிறது.
இந்த விருது பெறும் ஆசிரியர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய், வெளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் மற்றும் குடியரசுத் தலைவரால் டெல்லியில் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார். நடப்பாண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. தற்போது தகுதி உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் இருந்து 44 ஆசிரியர்களை மத்திய கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. அதில், தமிழகத்தை சேர்ந்த திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி மற்றும் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.