வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழா ஆரம்பமாகியுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனோ தொற்றுக் காரணமான இடர்காலநிலை தொடர்பான சுகாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு நல்லைக்கந்தன் அடியார்களின் பெருந்திரளினைக் கட்டுப்படுத்தும் நோக்கும் ஆலயச்சூழலில் மிக இறுக்கமான பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
இப் பயணத்தடை நல்லூர் கோவில் பெருந்திருவிழாவிற்கு பங்கம் ஏற்படாத வண்ணம் பக்த அடியார்களின் கட்டுப்படுத்த உதவியபோதும் நல்லூர் சூழலில் வர்த்தக நிலையங்களினை நடாத்துபவர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. ஏற்கனவே கொரோனோ தொற்றினால் அவர்களது வியாபார நடவடிக்கைகள் பாதிப்படைந்திருக்கின்ற நிலையில் இவ் பயணத்தடை அவர்களை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியிருந்தது.
இந்நிலையில் தாங்களுடைய இடர்கள் தொடர்பாக அப் பகுதி வர்த்தகர்கள் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களிடம் கடந்த இரண்டு தினங்களாக கோரிக்கைகளை முன்வைத்தனர்.
நல்லூர் பெருந்திருவிழா சிறப்பான முறையில் நடைபெற தனது முழுஒத்துழைப்பினையும் வழங்கிவரும் யாழ்.மாநகர சபை நல்லூரான் சூழலில் உள்ள வர்த்தகர்கள் எதிர் கொள்ளுகின்ற இடர்களுக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சியினையும் எடுத்திருந்தது.
வர்த்தகர்களின் இக் கோரிக்கைகள் தொடர்பில் மாநகர முதல்வர் நேற்றும் நேற்று முன்தினமும் பொலிசாரினைத் தொடர்பு கொண்ட நிலையில் இன்று பொலிசாருடன் நேரில் சென்று ஆராய்தார்.
இதன் போது நல்லூர் பெருந்திருவிழாவினை சிறப்பான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அதற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பயணத்தடைகளில் எவ்வாறு தளர்வு நிலைகளினை ஏற்படுத்தாலாம் என்பது குறித்து மாநகர முதல்வர், ஆணையாளர் மற்றும் பொலிசார் ஆராய்தனர்.
இதன் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு மாநகர முதல்வர் அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவ் அறிவித்தலில்
வீதித் தடைகளுக்கு உள்ளே உள்ள கடைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பொதுமக்கள் தகுந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் சென்று அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு விசேட பூஜை நேரங்களான அதிகாலை 4 மணிமுதல் 5.30 மணிவரை காலை 10 மணிமுதல் 12 மணிவரை மாலை 4 மணிமுதல் 6 மணிவரை ஆகிய நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் அனுமதிக்கப்படுவர்
விசேட திருவிழா நாட்களில் மேற்படி அனுதிகள் வழங்கப்பட மாட்டாது
மேலும் இந் நடைமுறை தேவைப்படின் நாட்டின் சுகாதார நிலையின் அடிப்படையிலும் சுகாதார வைத்திய அதிகாரியின் மேலதிக பணிப்பின் அடிப்படையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம்.