வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இராணுவத்திற்கு காணி சுவீகரிப்பதற்கான நில அளவை முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென 4 ஏக்கர் தனியார் காணி சுவீகரிக்கப்படவிருந்தது. காணி அளவீட்டு பணி இன்று காலை 9:30 மணிக்கு இடம் பெறுமென உரிமையாளர்களிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்ட ஆலோசகர் ந.காண்டீபன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் என பலரும் அங்கு திரண்டனர்.
நிலஅளவை திணைக்களத்தினர் அளவீட்டிற்கு வந்தபோது, வீதிக்கு குறுக்கே அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினருக்கு வழங்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் உறுதியாக தெரிவித்த நிலையில், நிலஅளவை திணைக்களத்தினர் அளவீடு செய்ய முடியாத நிலைமையேற்பட்டது.
இப் போராட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்த நிலையில், காணியை இராணுவத்திற்கு வழங்க மாட்டோம் என பொது மக்கள் சார்பில் யாராவது தெரிவித்தால் தாம் திரும்பி செல்வதாக நில அளவை திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
பொதுமக்கள் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கையெழுத்திட்ட கடிதம் எழுதி நில அளவைத்திணைக்களத்தினரிடம் கொடுக்கப்பட்டது.
போராட்டம் நடந்த இடத்தில் பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தமைமையில் போலீசார் ஆயுதங்களுடனும் சிவில் உடையிலும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.