தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது. இனப்பெருக்க உறுப்புக்களை பாதிக்காது. ஆகவே தடுப்பூசி செலுத்த யாரும் தயங்க வேண்டியதில்லை. குறிப்பாக, கருத்தரிக்க விரும்பும் பெண்களும், கருத்தரித்த பெண்களும் தயக்கமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார் யாழ் போதனா வைத்தியசாலையின் பெண்நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறிதரன்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (14) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
பாலூட்டும் தாய்மார் தடுப்பூசி செலுத்த தயங்க வேண்டியதில்லை. கருத்தரிக்க விரும்பும் இளம்பெண்களும் தடுப்பூசியால் அச்சப்பட தேவையில்லை. “வெளிநாட்டிலிருந்து கணவர் வரப்போகிறார், நான்வெளிநாடு போகப்போகிறேன். கருத்தரிக்க தடுப்பூசி பிரச்சனையா?“ என பலர் வைத்தியசாலைக்கு வருகிறார்கள். அவர்கள் அச்சமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
கர்ப்பிணிகளிற்கு ஏற்படும் வாந்தி, உடல்நோ போன்ற நிலைமைகளையும், கொரோனா அறிகுறிகளையும் கவனமாக அணுக வேண்டும். கொரோனா அறிகுறிகளை, கர்ப்ப கால அறிகுறிகளென நினைத்து அசமந்தமாக இருந்து விடாதீர்கள். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இப்படியான காரணத்தினால் இளம் கர்ப்பிணியொருவர் உயிரிழந்தார் என்றார்.