5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் ( டி.என்.பி.எல். ) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் லீக் முடிவில் திருச்சி வாரியர்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் , சேலம் ஸ்பார்டன்ஸ் , திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8 இடங்களை பிடித்து வெளியேறின. கடந்த 10-ந் தேதி பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்கியது. “குவாலிபையர் 1” ஆட்டத்தில் திருச்சி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை தோற்கடித்து வெளியேற்றியது.
நேற்று நடந்த “குவாலிபையர் 2 “ ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 103 ரன்னில் சுருண்டது. கேப்டன் ஹரி நிஷாந்த் அதிகபட்சமாக 46 பந்தில் 56 ரன் (2 பவுண்டரி, 4 சிக்சர் ) எடுத்தார். சாய் கிஷோர் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்தது.கேப்டன் கவுசிக் காந்தி 41 பந்தில் 53 ரன் ( 7 பவுண்டரி , 1 சிக்சர் ) எடுத்தார் . இன்று ஓய்வு நாளாகும். டி.என். பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் நாளை (15-ந் தேதி ) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது . இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. 4- வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வது தடவையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் டி.என்.பி.எல் கோப்பையை கைப்பற்றி இருந்தது. திருச்சி வாரியர்ஸ் அணி முதல் முறையாக இறுதிப்போட்டியில் ஆடுகிறது.