கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்கள் மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இவ் இடப்பற்றாக்குறையை கருத்திற் கொண்டு அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தினை தயார் செய்யும் வேலைகள் இடம்பெற்று வருகின்றது.
ஓட்டமாவடி மஜ்மா நகரைத் தொடர்ந்து இறக்காமம் – வாங்காமம் பிரதேசத்தில் இனம் காணப்பட்டுள்ள பகுதியில் 05 ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக தெரிவு செய்யப்பட்டிருட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மஜ்மா நகரில் கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு மையவாடி பூர்த்தியான பின்னர் இறக்காமம் கொரோனா மையவாடியில் அடக்கம் செய்வது தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கமைவாக கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்கள் அடக்கம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ள இறக்காமம் – வாங்காமம் பிரதேசத்தில் இனம் காணப்பட்டுள்ள பகுதிக்கு நேரடி கள விஜயம், இறக்காமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஷீல் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
கள விஜயத்தினைத் தொடர்ந்து கொரோனா மையவாடி முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் ஒன்றுகூடல் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜமீல் காரியப்பர் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச சபையில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் இறக்காமம் பிரதேச சபை உப தவிசாளர் அஷ்ஷெய்க் ஏ.எல். நௌபர், அக்கரைப்பற்று மாநகர உறுப்பினரும் அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத் தலைவருமான எஸ்.எம். ஷபீஸ், இறக்காமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.வை. ஜௌபர், பிரதேச சபை உறுப்பினர் என்.எம். ஆஷீக், பிரதேச சபை செயலாளர் எம்.ஏ. இர்பான், நில உத்தியோகத்தர் எம்.எல். மாஹிர், அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், உளவள ஆலோசனை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஓட்டமாவடி பகுதியில் கோவிட் தொற்றினால் உயிரிழந்த பல்லினத்தையும் சேர்ந்த 1500க்கு மேற்பட்டோரின் உடல்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.