யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கேஜிஎஃப் படத்தின் 2வது பாகம் விரைவில் தியேட்டரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் பிரஷாந்த் நீல். நாயகன் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
கடந்த ஜூலை மாதம் 16-ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா என பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், ‘கேஜிஎஃப் 2’ புதிய வெளியீட்டு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று இயக்குனர் பிரஷாந்த் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முன்னணி ஓடிடி தளம் ‘கேஜிஎஃப் 2’ படத்தை ரூபாய் 250 கோடிக்கு நேரடியாக வெளியிட கேட்டுள்ளது. இதற்கு, நடிகர் யாஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனமும் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. தியேட்டரில் மட்டுமே ’கேஜிஎஃப் 2’ படத்தை ரசிகர்கள் ரசிக்கவேண்டும்” என்று ஓடிடி தளத்துக்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.