காதலை ஏற்க மறுக்கும் பெண்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கேரள முதல்வர் பினராயி எச்சரிக்கை
கேரள மாநிலத்தில் காதலை ஏற்க மறுக்கும் இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
கடந்த ஜூலை 30-ம் தேதி, எர்ணாகுளம் மாவட்டத்தில் 24 வயது மருத்துவ மாணவி ஒருவர் அவரது சமூக ஊடக நண்பரால் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப் பட்டார். காதலை ஏற்கவில்லை என்பதற்காக அப்பெண்ணை சுட்டுக் கொன்ற அந்த நபர், பிறகு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவத்தை சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப் பினர் பி.டி.தாமஸ் நேற்று கவனத்துக்கு கொண்டு வந்தார். எம்எல்ஏ.க்களின் கேள்விகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்த பதிலில் கூறியதாவது:
காதல் என்ற பெயரில் பெண்களை துன்புறுத்து வோருக்கு எதிராக காவல் துறை ஒருபோதும் மென்மையாக நடந்து கொள்ளாது. காதலை ஏற்க மறுக்கும் பெண்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது தொடர்ந்து உறுதி செய்யப்படுகிறது. பெண்களை அச்சுறுத்துதல், பிந்தொடர்தல் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளானவர்களை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.