அரசியல் கைதிகளுடைய விடயத்தில் தெற்கில் செயற்படுகின்ற நீதிமன்றங்கள் ஒரு விதமாகவும், வடக்கு கிழக்கில் செயற்படுகின்ற நீதிமன்றங்கள் இன்னொரு விதமாகவும் செயற்படுவது குறித்து ஐநா போன்ற அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்கான ஒரு அழுத்த குழுவாகவே நாம் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.
அதற்கேற்ப மக்கள் எழுச்சியோடு போராட்டம் நடத்துவது. அதே போன்று ஐக்கிய நாடுகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு இந்த கைதிகள் தொடர்பான விபரங்களை கையளிப்பது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் காரணமாக, மனித உரிமைகள் மீறப்பட்டன என்பது தொடர்பான ஆவணங்களை தயாரித்து அதனை உரியவர்களிடம் கையளிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். மேலும் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் இப்போது சர்வதேசமும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.
அரசியல் கைதிகளுடைய விடுதலை என்பது, தமிழ் மக்களுடைய ஒரு கோரிக்கையாக மட்டுமல்ல, அது தெற்கில் இருக்கின்ற மக்களுடைய கோரிக்கையாகவும் அமைய வேண்டும். இந்த பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்கின்ற குரல் தெற்கிலும் இடம்பெற வேண்டும். அரசியல் கைதிகள் எந்த விதமான நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.