யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் பல்வேறு அதிரடி அறிவிப்புக்களை அடிக்கடி வெளியிட்டு வந்தாலும், அவையெல்லாம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற வலுவாக சந்தேகத்தை ஏற்படுத்தும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் மாநகரசபையில் வரி செலுத்தி, மாநகர எல்லைக்குள் வர்த்தக நிலையம் நடத்தும் ஒருவர் அண்மையில் பேஸ்புக் பதிவொன்றை இட்டிருந்தார்.
அதில், தனது வர்த்தக நிலைய வாசல், அனுமதியற்ற வாகன தரிப்பிடமாக இயங்குவதாகவும், தனது மோட்டார் சைக்கிளை கடை வாயிலில் நிறுத்துவதென்றாலும், எடுப்பதென்றாலும் அவர்களிடம் அனுமதி பெற வேண்டியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து, யாழ் நகரில் வர்த்தக நிலையம் நடத்தும் வேறு சில வர்த்தகர்களும் இதே பிரச்சனையை தாம் முகம் கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
யாழ் மாநகரசபைக்கு வரி செலுத்தும் இந்த வர்த்தகர்கள், அனுமதியில்லாத தரிப்பிடக்காரர்களால் சந்திக்கும் நெருக்கடிகளை பலமுறை யாழ் மாநகரசபையிடம் தெரிவித்துமுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வர்த்தகரின் பிரச்சனையை கேட்டறிய யாழ் மாநகரசபை முதல்வரும், ஆணையாளரும் நேரில் சென்றிருந்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில், யாழ் மாநகரசபைக்கு தாம் ஏன் வரி செலுத்த வேண்டுமென ஒரு வர்த்தகர் தமிழ் பக்கத்துடன் பேசும் போது கேள்வியெழுப்பினார்.
அனுமதியற்ற தரிப்பிடக்காரர்களால் தமது கடை வாசலில் சிவப்பு வர்ணம் தீட்டியதை போல வெற்றிலை துப்பியிருப்பதையும் ஒரு வர்த்தகர் பதிவிட்டிருந்தார். இத்தனைக்கும், யாழ் மாநகரசபை எல்லைக்குள் பொது இடத்தில் எச்சில் துப்புபவர்களிற்கு 2,000 ரூபா அபராதம் விதிக்கப்படுமென யாழ் மாநகர முதல்வர் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தல் விடுத்து, பேஸ்புக் லைக்ஸ் அள்ளினார். ஆனால் அது நடைமுறைக்கு வரவேயில்லை. அதற்கான பொறிமுறையும் உருவாக்கப்படவில்லை.
யாழ் மாநகரத்தில் இது பல இடங்களிலும் உள்ள பிரச்சனை, யாழ் மாகர நிர்வாகத்தின் பலவீனத்தினால் இதனை சீர் செய்ய முடியாமலுள்ள நகரிலுள்ள மூத்த வர்த்தகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார். சட்டத்தரணியொருவர் முதல்வராக உள்ள யாழ் மாநகரசபையிடம், சட்டத்தின் நிர்வாகத்தை முறையாக அமுல்ப்படுத்தக் கோரி விரைவில் வர்த்தக சமூகத்தினரை திரட்டி போராட்டமொன்றை நடத்தப் போவதாக தெரிவித்தார்.