முகநூல் காதலனை வரவழைத்து தூங்கிக் கொண்டிருந்த கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். போட்டோ ஷாப்பால் தனது தோற்றத்தை மாற்றி பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட புகைப்படங்களால் ஏமாந்த சுமார் 50 பேர் அவருடன் “உறவு பாராட்டி“யுள்ளனர். அதில் ஒருவரின் துணையுடனேயே இந்த கொலை நடந்தது.
சேலம் அம்மாபேட்டையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாழை இலைவியாபாரி, மனைவி மற்றும் மனைவியின் முக நூல் காதலனால் கொலை செய்யப்பட்ட நிலையில், மனைவி ஷாலினி மற்றும் திருச்சி துரையூரை சேர்ந்த 23 வயது இளைஞர் காமராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
காதலன் காமராஜால், ஷாலுமா என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஷாலினி போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில், தனக்கும் தனது கணவருக்கும் 16 வயது வித்தியாசம் என்றும் தனது கணவரால் தன்னுடைய ரசனைக்கு ஒத்துழைக்க இயலவில்லை என்றும் தெரிவித்தார். முகநூல், வாட்ஸ் அப், என எந்த ஒரு தகவல் தொழில் நுட்ப விஷயமும் தெரியாமல் இலை கடையையே கதி என்று இருந்ததால் தான் முகநூலில் நண்பர்களை தேடியதாகவும், தனது விருப்பத்துக்கு ஏற்றபடியே 23 வயதான காமராஜ் இருந்ததால் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதாகவும் இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக்கட்டியதாகவும் போலீசில் சிக்காமல் இருக்க கொள்ளையர்கள் வந்ததாக நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார் ஷாலு.
இதற்கிடையே முக நூல் காதலன் காமராஜ் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில், கணவர் இல்லை என்றால் நிம்மதியாக இருவரும் வாழலாம் என்று காதலி ஷாலு சொன்னவார்த்தைகளை நம்பி கணவர் பிரபுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாகவும், அதன்படி அவரது வீட்டுக்கு சென்றதாகவும், கதவை திறந்த ஷாலு, தன்னை வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டிக்கு அடியில் யார் கண்ணிலும் படாமல் பதுங்கி இருக்க சொன்னதால் அங்கு இருந்ததாகவும், நள்ளிரவு 11;30 மணி அளவில் கணவன் உறங்கி விட்டதாக செல்போன் மூலம் ஷாலு தகவல் சொன்னதை தொடர்ந்து தான் கீழே சென்றதாக தெரிவித்துள்ளான் காமராஜ்.
வீட்டிற்குள் படுக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிரபுவின் கால்களை ஷாலு இறுக்கி பிடித்துக் கொள்ள, பிரபுவின் முகத்தில் மிளகாய் பொடி போட்டு துணியால் இறுக்கமாக மூடி தான், அவரது முகத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டதால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும் ஒப்புக் கொண்ட காமராஜ், இந்த சம்பவத்தை கொள்ளையர்கள் செய்தது போல இருக்கவேண்டும் என்பதற்காக பிரபு அணிந்திருந்த தங்க மோதிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியதாக தெரிவித்துள்ளான்.
முக நூலில் வெளியிட்ட புகைபடத்தில் பள பளப்பாக தெரிந்த ஷாலு கைது செய்யப்பட்ட போது டல்லாக உடல் பருமனுடன் காணப்பட்டதால் அது குறித்து அவரிடம் விசாரித்த போது தான் போட்டோஷாப் ஆப் ஒன்றின் மூலம் தன்னை அழகுபடுத்திக் கொண்டதாக தெரிவித்தார். இதனை நம்பித்தான் முகநூலில் 50 பேர் ஷாலும்மாவின் ஆளுமாவாக நட்பு வலையில் சிக்கியுள்ளனர். இதில் ஒரு படி மேலே போய் முக நூலில் இருந்து நேரடி தொடர்பிற்க்கு வந்த துரையூர் மைனர் காமராஜ் கொலை வழக்கில் சிக்கி கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஷாலினியின் விபரீத புத்தியால் அவரது 2 வயது குழந்தை ஆதவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நிஜமான அன்பை உணராமல், முகநூலில் மூழ்கி , போட்டோஷாப்பை நம்பி காதல் டீலிங் வைத்தால் இறுதியில் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாகி இருக்கின்றது இந்த கொலை சம்பவம்.