அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்

Date:

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத் தலைவரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 81.

அதிமுகவின் அவைத் தலைவரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில மாதங்களாக, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டிலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், பின் மெல்ல உடல்நலம் தேறினார். ஏப். 6 அன்று, நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்டிலேட்டர் உதவியுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின், கடந்த மாதம் அவருடைய உடல்நலம் மோசமடையவே, சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் சந்தித்து, அவருடைய குடும்பத்தாரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், இன்று (ஆக. 05) மாலை மதுசூதனன் காலமானார். அவருக்கு வயது 81. அவருடைய மறைவால் அதிமுகவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சைதை துரைசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய இறுதிச்சடங்கு விவரங்களை அவருடைய குடும்பத்தினர் விரைவில் வெளியிடுவர்.

இது தொடர்பாக, அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1950-களிலேயே எம்ஜிஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய மதுசூதனன், வடசென்னையில் அதிமுக வளர முக்கியக் காரணமாக இருந்தவர். கட்சியினரால் ‘அஞ்சாநெஞ்சன்’ என அழைக்கப்பட்டவர். 1991-ல் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக இருந்தவர். 2007-ம் ஆண்டு முதல் அதிமுகவின் அவைத்தலைவராக உள்ளார்.

2017-ல் அதிமுக இரு அணியாகப் பிரிந்தபோது, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக நின்றவர். ஓபிஎஸ் அணி – ஈபிஎஸ் அணி என, அதிமுக பிரிந்தபோது, மதுசூதனனிடமே கட்சியின் பெயர், சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. மதுசூதனன் இருக்கும்வரை அவர்தான் அவைத்தலைவர் என, ஜெயலலிதா கூறியது கடைசிவரை பின்பற்றப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்