கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசி செலுத்துவதற்கு சென்ற 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் நுற்றுக்கணக்கானவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது-
யூலை மாதம் 06 திகதியும் அதனை அண்டிய சில நாட்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் போது இரண்டாவது தடுப்பூசி இன்றைய தினத்திற்கு திகதி குறிப்பிட்டது.
எனவே 60 வயதுக்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட முதியவர்கள் தடுப்பூசி அட்டையில் குறிப்பிட்ட இன்றை தினம் தங்களுக்கான இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு காலை ஆறு முதல் சென்றுள்ளனர். சுமார் ஒன்பது மணி வரை இவ்வாறு நூற்றுக்கணக்கான முதியவர்கள் மத்திய கல்லூரி மண்டபத்தில் ஒன்று சேர்ந்த போது தடுப்பூசி செலுத்துவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் இடம்பெறவில்லை.
இது தொடர்பில் அறிந்த இராணுவத்தினர் சம்பவ இடத்திற்குச்சென்று 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி வரும் ஏழாம் திகதி பின்னர் கிடைக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் எனவே இது தொடர்பான அறிவித்தல் சுகாதாரதுறையினரால்
அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் சமூகம் தருமாறும் தெரிவித்து, பொது மக்களை திருப்பி அனுப்பினர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பிரிவு அதிகாரிகளுடன்
தொடர்பு கொண்டு வினவிய போது, இச்சம்பவம் தொடர்பில் தங்களுக்கு எதுவும்
தெரியாது என்றும், முதலாவது தடுப்பூசியினை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
இராணுவத்தினரே செலுத்தினார்கள் எனவே அவர்களே இவர்களுக்கான பதிலளிக்க
வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தால் வயோதிப நிலையிலும் தூர இடங்களிலிருந்து வந்த மக்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் திரும்பிச் சென்றனர். தங்களுக்கு முறையான அறிவித்தல்களை வழங்கியிருந்தால் கொரோனா பரவல் நெருக்கடி மத்தியிலும் வீண் அலைச்சல் இருந்திருக்காது எனத் தெரிவித்தனர்.