.யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி அட்டை வைத்திருப்பது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்
தற்போது யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
யாழ் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமையானது சற்று தீவிரம் பெற்று காணப்படுகின்றது. நேற்றைய பரிசோதனையின்போது 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
137 கொரோனா இறப்புகள் இன்றுவரை யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அந்தவகையில் 2,445 குடும்பங்களைச் சேர்ந்த6969 பெயர் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். வேலணை, பருத்தித்துறை பிரதேசத்தில் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த நிலைமையில் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும்.
தற்போது ஆலய வழிபாடுகள் ஊடாக மக்கள் ஒன்று சேர்வது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மதித்து தங்களுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் ஆலய நிர்வாகிகளும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றபடுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போதைய நிலைமையில் 100 பேருக்கு உட்பட்டவர்களின் பங்கு பற்றுதலோடு உள்வீதி வலம் வர மாத்திரமே ஆலயங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை மதித்து நடந்துகொள்ள வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது திறமையாக செயற்படுத்தப்படுகிறது. முதற்கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது எதிர்வரும் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
முதற்கட்டமாக தடுப்பூசியினை 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் யாழ்மாவட்டத்தில் வழங்கி வருகின்றோம்.
அதே நேரத்தில் தொழில் துறையில் ஈடுபாடு கொண்ட சகலருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. யாரேனும் அவ்வாறு தொழிலில் ஈடுபடுவோர் தடுப்பூசி பெறாவிட்டால் அண்மையில் உள்ள பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு அந்த தடுப்பூசியில் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் தடுப்பூசியை 30 வயதுக்கு மேற்பட்டோர் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது தேவையானதொன்று. இது சட்டத்தில்நடைமுறைப்படுத்த படாவிட்டாலும் சமூகத்தினுடைய பாதுகாப்பு கருதி அது கட்டாய தேவையாக கருதப்படுகிறது.
மேலும் தடுப்பூசிஅட்டையானது இனிமேல் சில அரச திணைக்களங்கள் அதேபோல வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய பொது இடங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், பொதுச் சந்தைகள் பொது சேவைகளை பெறுவதற்கும் பேருந்துகளில் பயணிப்பதற்கும் கூட தடுப்பூசி அட்டையினை காண்பித்து தான் யாழ்ப்பாண மாவட்டத்தில் பயணிக்க முடியும்.
எனவே தடுப்பூசியினை பெற்றுக்கொண்டு அதற்கு அடையாளமாக விளங்குகின்ற அட்டையை பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
மேலும் எதிர்வரும் 9ஆம் திகதி 10 ஆம் திகதிகளில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. அதாவது முதற்கட்டமாக ஆரம்பகட்டத்தில் முதலாவது தடுப்பூசி பெற்றோருக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே முதலாவது டோஸ் பெற்றோர் தமக்குரிய இரண்டாவது டோசினை அந்தந்த தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று பெற முடியும்.
தடுப்பூசியினை வயது முதிர்ந்து நடமாட முடியாது வீடுகளிலே தங்கியிருப்போர் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று தடுப்பூசியை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு இருப்பவர்கள் தங்களுக்குரிய விவரங்களை அந்தந்த பிரதேச செயலர் மற்றும் பொது வைத்திய அதிகாரி களுக்கு அறிவிப்பதன் மூலம் தங்களுக்கு உரிய ஊசியினை பெற்றுக் கொள்ள முடியும்.
தடுப்பூசி அட்டையை பெற்றுக் கொள்வதோடு தடுப்பூசியை அட்டையினை தங்களுடன் வைத்துக் கொள்வது சகல பொதுமக்களின் கடமையாகும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த தடுப்பூசி பெற்றுக் கொள்வது அனைத்து சமூகத்தையும் பாதுகாப்பதற்குரிய ஒரு செயற்பாடாக அமையும்.
யாழில் டெல்டா வைரஸ் பரவக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது எனவே பொதுமக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லைக் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான சுகாதார வழிகாட்டலின் படி 100 பேருடன் ஆலய உட்பிரகாரத்தில் மாத்திரம் திருவிழா நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வருட ஆலய உற்சவத்தினை திறம்பட செயற் படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.