முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் விவசாயி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதால் கிராமத்தவர்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள்.
03.08.21 அன்று மாலை 2.50 மணியளவில் முல்லைத்தீவு அம்பகாமம் கிராமத்தில் விவசாயி ஒருவர் விவசாய நிலத்தை அண்மித்த ஆற்றங்கரையில் துப்பரவு செய்து கொண்டிருந்தவேளை அவ்விடத்துக்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர் காணி அனுமதிப்பத்திரம் உள்ளதா என வினவிய நிலையில் ஆவணங்கள் இல்லை என விவசாயி தெரிவித்துள்ளார்.
குறித்த நிலைமை தொடர்பில் ஊடகவியலாளரால் பொலிசார் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பணிகளை நிறுத்தி குறித்த விவசாயி உள்ளிட்டவர்கள் கனரக வாகனத்தையும் எடுத்துக் கொண்டு வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு மாங்குளம் பொலீசார் வந்து குறித்த இடத்தினை பார்வையிட்டபோது இடத்தினை பொலிசாருக்கு காண்பித்து விட்டு ஊடகவியலாளர் அங்கிருந்து சென்றுள்ளார்.
பின்னர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்ததோடுஅதன் பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து குறித்த பகுதியின் கிராம சேவையாளர் அங்கு சென்று குறித்த காணியின் உரிமையாளரையும் அழைத்து சென்று குறித்த இடத்தினை பார்வையிட்டுள்ள வேளையிலேயே விவசாயி குறித்த காணியில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இன்னிலையில் 04.08.21 இன்று சடலம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் பிரோத பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவரது உயிரிழப்பு தொடர்பில் மாங்குளம் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதேவேளை கிராம மக்கள் ஊடகவியலாளரின் செயற்பாட்டாலேயே விவசாயி உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளபோதும் குறித்த இடத்தில் இருந்து ஊடகவியலாளர் சென்று இரண்டு மணிநேரம் கழித்தே இந்த சம்வம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது..