♦உ.ஸ்ரீ
ஓகஸ்ட் 1 நண்பர்கள் தினம். பொதுவாக நண்பர்கள் தினத்தில் 90’s கிட்ஸ் ‘முஸ்தபா முஸ்தபா’ பாடலையும், 2கே கிட்ஸ் ஹிப்ஹாப் தமிழா பாடல்களையும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்து கம்பிகட்டுவார்கள். ஆனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக வேறொரு நிகழ்வை ஸ்டேட்டஸில் வைத்து நிறைய பேர் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அந்த நிகழ்வில் இடம்பெற்றிருந்தவர்கள் ஜன்மார்க்கோ டம்பேரி மற்றும் பார்ஷிம் என்ற இரு தடகள வீரர்கள்.
ஒரே நாளில் உலகம் முழுவதும் நட்பின் அடையாளமாக மாறியிருக்கும் இவர்கள் யார்?

ஜன்மார்க்கோ டம்பேரி இத்தாலியை சேர்ந்தவர். முட்டாஸ் பார்ஷிம் கத்தாரை சேர்ந்தவர். இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் பங்கேற்றிருந்தனர். பங்கேற்ற எல்லா வீரர்களும் தங்களுக்கான வாய்ப்பில் தாண்டி முடிக்கின்றனர். ஜன்மார்க்கோ டம்பேரி மற்றும் முட்டாஸ் பார்ஷிம் இருவரும் மட்டும் 2.37 மீட்டருக்கு தாண்டி சமநிலையில் முடிக்கின்றனர். யாருக்கு தங்கப்பதக்கத்தை கொடுப்பது என்கிற கேள்வி எழுகிறது.
டை பிரேக்கர் சுற்று தொடங்கியது. கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளில் இருவராலும் சரியாகத் தாண்ட முடியவில்லை. இப்போதும் இருவரும் சமநிலையில் இருக்கின்றனர். நடுவர் வேகமாக இருவரையும் நோக்கி வருகிறார். Jump Off அதாவது முடிவை தீர்மானிக்கும் வகையில் ஒரு முறை கடைசியாக தாண்டுகிறீர்களா? என இருவரிடமும் கேட்கிறார் நடுவர்.
அதற்கு பார்ஷிம், இரண்டு தங்கப்பதக்கத்திற்கு வாய்ப்பிருக்கிறதா என கேட்கிறார். அது உங்களுடைய விருப்பம் என்கிறார் நடுவர். இப்போது பார்ஷிம், டம்பேரியின் கண்களை பார்க்கிறார். ஒரே ஒரு நொடிதான் டம்பேரியும் சம்மதம் தெரிவித்து கண்ணை சிமிட்டிவிடுகிறார். இதுதான் நடந்தது.

இந்த கண்சிமிட்டலுக்கு பின்னால் சினிமாவின் ஆந்தாலஜிக்களைப் போல வெவ்வேறு ட்ராக்கில் பயணித்து ஒரு புள்ளியில் இணையும் பெருங்கதையே அடங்கியிருக்கிறது.
இத்தாலியில் பிறந்த டம்பேரியின் தந்தை ஒரு தடகள் வீரர். பின்னாட்களில் பயிற்சியாளராகவும் மாறினார். அவர் மூலமே டம்பேரிக்கு விளையாட்டின் மீது ஆர்வம் உண்டாகியிருக்கிறது. தந்தையே முன் நின்று பார்த்து பார்த்து தன்னுடைய மகனுக்கு பயிற்சியளித்ததால் சீக்கிரமே ஜொலிக்க ஆரம்பித்தார் டம்பேரி. 2016இல் கலந்துக்கொண்ட அத்தனை தொடர்களிலும் போடியத்தில் ஏறியிருந்தார். குறிப்பாக, உலக தடகள சாம்பியன்ஷிப்பையும் யுரோ தொடரையும் வென்றிருந்தார்.

ரியோ ஒலிம்பிக்கில் இத்தாலி சார்பாக உயரம் தாண்டுதலில் உறுதியாக பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. டம்பேரியும் நெஞ்சம் நிறைந்த ஆசைகளோடும் கனவுகளோடும் ரியோ ஒலிம்பிக்கிற்கு தயாரானார். எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்தது. ஒலிம்பிக்கிற்கான நாட்கள் நெருங்குகிறது. இன்னும் இரண்டு வாரங்களே இருக்கிறது. அப்போது ஒரு அசம்பாவிதம் நடந்தது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது டம்பேரியின் கால் முறிந்தது. அத்தோடு டம்பேரியின் ஒலிம்பிக் கனவும் முறிந்து போனது. மீண்டும் மைதானத்திற்கு திரும்புவதே கடினம் எனும் சூழல் உருவானது.
ஒட்டுமொத்த தேசத்தின் கனவையும் சுமந்திருந்த டம்பேரி நொறுங்கிப்போனார்… உடைந்து அழுதார்… வீட்டுக்குள் முடங்கினார். அப்போது அவருக்கு ஆறுதல் சொல்லி ஊக்கமளிக்கும் வகையில் ஒரே ஒரு குரல் எழுகிறது. அது முட்டாஸ் பார்ஷிமுடையது.
டம்பேரி இத்தாலியர், முட்டாஸ் கத்தார்காரர். இருவரும் எதிராளிகளாக களத்தில் மோதிக்கொள்ளும் வீரர்கள். அப்படியிருக்கும் போது இது எப்படி சாத்தியம் என கேள்வி எழலாம். விளையாட்டில் எல்லாம் சாத்தியமே. விராட் கோலிக்கு டிவில்லியர்ஸ் நெருங்கிய நண்பராக இருப்பதை போல.. .தாய்-சூ-யிங்கிற்கு சிந்து ஆறுதல் கூறுவதை போல… பாகிஸ்தான் வீரர்களுக்கு சென்னை ரசிகர்கள் ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுத்ததைப்போல… விளையாட்டுலகில் எல்லாமே சாத்தியமே. வெளி உலகின் இருண்மைகளை சுக்குநூறாக்கி போடும் சக்தி விளையாட்டுக்கே உண்டு.
டம்பேரியும் பார்ஷிமும் ஜுனியர் லெவல் போட்டிகளில் ஆடும்போதிருந்தே நல்ல நண்பர்கள். அந்த நட்பு டம்பேரி முடங்கிக்கிடந்த நாட்களில் இன்னும் நெருக்கமாகியிருக்கிறது. விளையாட்டை விட்டே ஒதுங்கிவிடலாம் என்று நினைத்திருந்த டம்பேரியிடம் தொடர்ந்து பேசி அவரின் மனதை மாற்றியவர் பார்ஷிம். பார்ஷிம் மூலம் ஊக்கம் பெற்ற டம்பேரி மீண்டெழத் தொடங்கினார்.
தன்னுடைய கால்களுக்கு போடப்பட்டிருந்த கட்டை பத்திரமாக அவிழ்த்து அதில் டோக்கியோ 2020 என எழுதி பாதுகாத்து வைத்துவிட்டு வேலையை தொடங்கினார். பழைய ஃபோர்முக்கு வர சிரமப்பட்டார்… காயங்களால் அவதியுற்றார்… ஆனால் போராடினார். மீண்டு வந்தார்… ரியோவில் தடம்பதிக்காத டம்பேரியின் கால்கள் டோக்கியோவில் தடம்பதித்தது.
இடையில் 2017-18 காலக்கட்டங்களில் பார்ஷிமுக்கும் காலில் முறிவு ஏற்பட்டு அவதிப்பட்டார். அப்போது பார்ஷிமுக்கு உறுதுணையாக இருந்தது டம்பேரி. நாடுகள், எல்லைகள், போட்டிகள், அரசியல் இது எதுவுமே இருவரின் நட்புக்கும் இடையூறாக இல்லை. காயத்திலிருந்து மீண்டு வந்து பார்ஷிமும் டோக்கியோ ஒலிம்பிக்கில் கால் பதித்தார்.
டம்பேரிக்கு 2016இல் தவறவிட்ட தங்கத்தை வெல்ல வேண்டிய நெருக்கடி இருந்தது. ஏற்கனவே, வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றிருக்கும் பார்ஷிமுக்கு தங்கம் வென்றுவிட்டால் முழு திருப்தி உண்டாகிவிடும் என்ற சூழல் இருந்தது.

விதி வலியது. இணைந்த கைகளாக டோக்கியோவிற்குள் நுழைந்த இந்த நண்பர்கள் அவர்களின் நட்பில் சிறுவிரிசல் கூட இல்லாமல் திரும்ப வேண்டும் என எழுதப்பட்டிருக்கிறது.
போட்டி சமநிலை ஆனது. கடந்த ஐந்து ஆண்டுகளில் காயத்தின் வலியை இருவரும் உணர்ந்திருந்தனர். இருவரின் கண்களுக்குள்ளும் தேங்கியிருக்கும் ஏக்கத்தை இருவரும் அறிந்திருந்தனர். அதன் அடையாளமே அந்த கண்சிமிட்டல்.
இருவருக்கும் தங்கப்பதக்கம் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. டம்பேரி பாதுகாத்து வைத்திருந்த கால் கட்டோடு கண்ணீர் சிந்தி தனது வெற்றியை கொண்டாட, பார்ஷிம் மூன்று பதக்கங்களையும் வென்ற திருப்தியோடு மைதானத்தை ஆராவாரமாக சுற்றி வந்தார். இரண்டு நாட்டு ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த உலகமுமே இவர்களின் வெற்றியை கொண்டாடுகிறது. வென்றது தங்கம்… ஆனால் மின்னியது இவர்களின் நட்பும் அன்புமே!