இளைஞன் கடத்தித் தாக்கப்பட்டது, பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவருடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தொடர்பு பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் பொலிஸாரால் ஒருவர் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
“இது தொடர்பில் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளேன். சம்பவத்தோடு தொடர்புடைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் உடனடியாக பணி நீக்கம் வழங்குமாறும் நான் உத்தரவிட்டுள்ளேன். எனவே பொதுமக்கள் இது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் கடமையாற்றும் அதேவேளை, ஒரு சில பொலிஸ் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பணத்துக்காக வன்முறைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.
ஒரு சிலரின் தேவைக்காக பணத்தைப் பெற்று பொலிஸார் செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன், குற்றச்சாட்டு எழுந்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் அமைதியையும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப பொலிஸார் தமது கடமையை செய்துவரும் நிலையில் இவ்வாறான சில பொலிஸ் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தவறான வகையில் செயற்படுகின்றமை வருந்தத்தக்கது” என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே கூறினார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு குறித்து, யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.