கமலுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த புது மாப்பிள்ளை!
பிரபல கவிஞர் சினேகனுக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் தன்னுடைய திருமணத்தை முன்னின்று நடத்திய நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் கவிஞர் சினேகன்.
தமிழ் சினிமாவில் 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளவர் கவிஞர் சினேகன். இவர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டதன் பிரபலமானார். தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவரும் சினேகன், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தொலைக்காட்சி நடிகை கன்னிகாவை கரம்பிடித்தார்.
சினேகன், கன்னிகா இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளன. இந்நிலையில், தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது . சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த இவர்களின் திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையேற்று நடத்திவைத்தார்.
இவர்களது திருமணத்தில், இயக்குனர் பாரதி ராஜா, இயக்குனர் அமீர், பழ கருப்பையா, உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அர்ச்சகர் இல்லாமல் நடைப்பெற்ற இந்தத் திருமணத்தில் கமல் தாலி எடுத்துக் கொடுக்க, அதை கன்னிகாவின் கழுத்தில் கட்டினார் சினேகன். இந்நிலையில் தன் திருமணத்தை முன்னின்று நடத்திய நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் சினேகன்.
அதில், “எனக்கான எல்லா உறவுமாய் இருந்து என் இல்லற இணைவு விழாவை முன்னின்று நடத்திய என் மூத்த அண்ணன், என் தலைவர், எனக்கான ஆண் தேவதைக்கு என் ஆயுள் உள்ளவரை நன்றிகளைக் கூறிக்கொண்டே இருப்பேன். நன்றி அண்ணா” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் சினேகன்.