24.8 C
Jaffna
January 4, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

ஹிஷாலினியின் சடலம் தோண்டப்பட்டது: இரண்டாம் பிரேத பரிசோதனைக்காக கண்டிக்கு அனுப்பப்பட்டது!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பு வீட்டில் சிறுவர் உரிமை சட்டத்தை மீறி தொழிலுக்கு அமர்த்தப்பட்ட நுவரெலியா டயகம மேற்கு தோட்ட சிறுமியான ஜூட்குமார் ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் (15.07.2021) அன்று உயிரிழந்தார்.

இந்த சிறுமியின் உயிரிழப்பு இன்றும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில் மர்ம உயிரிழப்பாகவே உள்ளது.

இச்சிறுமியின் இறப்புக்கு பின் அவரது உடல் கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டு சவப்பெட்டி முற்றாக மூடப்பட்ட நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு கையளிக்கப்பட்டது.

இதையடுத்து சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் எழுந்த சந்தேகம் அதையடுத்து வழங்கப்பட்ட அழுத்தம் இன்றும் மலையகம் மற்றும் இன்றி நாட்டில் பல பாகங்களிலும் போராட்ட வடிவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் இந்த சிறுமி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டின் வீட்டில் எவ்வாறெல்லாம் வழிநடத்தப்பட்டார், துன்புறுத்தப்பட்டார் என்பது தொடர்பில் மற்றுமின்றி வன்புனர்வு, என பல்வேறு விடயங்கள் வெளியானது.

இந்த நிலையில் சிறுவர் அமைப்புகள், அதிகார சபைகள், மனித உரிமைமீறல் தாபனங்கள், பொது அமைப்புகள், அரசியல்வாதிகள் ஆகியோர்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய அழுத்தத்தினால் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் அண்மையில் சிறுவர் உரிமை பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மனித உரிமை மீறல் அமைப்பிடம் சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தை வெளியிட்டிருந்தனர்.

இதனடிப்படையில் தனது மகளின் பிரேத பரிசோதணையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் மீண்டும் சடலத்தை தோண்டி மீண்டுமொறு பிரதே பரிசோதணையை சட்ட ரீதியாக முன்னெடுக்க வேண்டும் என முறையிட்டிருந்தனர்.

இதற்கமைய கொழும்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் மனித உரிமை மீறல் அமைப்பு நீதிமன்றத்தை நாடி சிறுமியின் உடலத்தை இரண்டாவது முறையாக பரிசோதணைக்கு உட்படுத்த நீதிமன்ற உத்தரவை பெற்றிருந்தது.

இதையடுத்து சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட டயகம மேற்கு தோட்ட புதைக்குழிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு கடந்த நாட்களாக இடப்பட்டது.

மேலும் சிறுமி மரணம் தொடர்பில் விசேடமாக விசாரிக்க கொழும்பிலிருந்து விசேட பரிசோதனை குழு ஒன்றும் டயகமைக்கு அனுப்பிவைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் (30.07.2021) அன்று நுவரெலியாவுக்கு வருகை தந்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி. லூஷாகா குமாரி ஜெயரத்ன சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி அதை உடல் கூற்று பரிசோதணைக்காக கண்டி பேராதெனிய வைத்தியசாலைக்கு அனுப்ப அனுமதி கேட்டிருந்தனர்.

இதற்கமைய நீதவான் திருமதி. லூஷாகா குமாரி ஜெயரத்ன அனுமதி வழங்கியதுடன் தனது முன்னிலையில் கொழும்பில் இருந்து வரவழைக்கப்பட்ட சட்ட வைத்தியர் ஒருவர், கண்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட சட்ட வைத்தியர்கள் இருவர் உட்பட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழு மத்தியில் தோண்டப்படுமென நீதிபதி அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் டயகம பிரதேசத்திற்கு (30) காலை சென்ற குழுவினர் காலை 9.00 மணியளவில் புதைக்குழி தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

படிப்படியாக முன்னெடுக்கப்பட்ட இந்த பணியின்போது அங்கு புதைக்குழி மண் பரிசோதிக்கவும்பட்டது. கொரோனா சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

மழை வந்தால் பாதுகாப்பாக இருக்க மயானத்தில் புதை குழிக்கு கூடாரம் அமைக்கப்பட்டது. சடலம் அடங்கிய பேழையை சரியாக 12.20 மணிக்கு பாதுகாப்பாக குழியிலிருந்து மீட்டனர்.

அங்கு போடப்பட்டிருந்த மேசையில் சடலம் வைக்கப்பட்டு சவப்பேழை கதவு அகற்றப்பட்டு சடலம் அடையாளம் காணப்பட்டது.

சடலத்தை அடையாளம் காட்ட விடுக்கப்பட்ட நீதிமன்ற அழைப்புக்கு அமைய சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்கள் வருகை தந்து சடலத்தை நீதவான் முன்னிலையில் அடையாளம் காட்டினர்.

உறவினர்களின் கண்களில் நீர் கொட்டினாலும் சிறுமியின் தாய் கதறி அழுவதற்கு முடியாமலிருந்தார்.

உனக்கு நீதி கிடைக்கும் அதுவரை அழமாட்டேன் என தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தாய் ஆக்ரோசமாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

Leave a Comment