பணிப்பெண்ணான 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சந்தேக நபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் நேற்று (26) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமானமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ரிஷாட் பதியுதீனை சந்தேக நபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்தார்.
ரிஷாத் பதியுதீனுக்கு 16 வயதில் மகள் ஒருவர் இருக்கும்போது அதே வயதையொத்த ஒரு சிறுமியை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் அவர் ஏன் சிந்திக்கவில்லை என்று பிரதி மன்றாடியார் நாயகம் வினவினார்.
சிறுமி மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வர் மீதும் வன்கொடுமை, சிறுமியை பணிக்கு அமர்த்தியமை, கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சிறுமி தீக்காயங்களிற்குள்ளான உடனேயே அவரை வைத்தியசாலையில் அனுமதிக்காமல், தாமதமாக அனுமதித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
ரிஷாத் பதியுதீன் வீட்டில் பல வாகனங்கள் நின்ற போதும், அவற்றில் சிறுமியை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல், 119 அவசர சேவைக்கு அழைப்பேற்படுத்தி, நோயாளர் காவு வண்டி வந்த பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையும் பிரதி மன்றாடியார் நாயகம் சுட்டிக்காட்டினார்.
சிறுமி காலை 6.45 மணிக்கு தீக்காயமடைந்த போதும், 8.30 மணிக்கே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிஷாத் வீட்டிலிருந்து 15-20 நிமிடத்தில் வைத்தியசாலையை அடைய முடியுமென்ற போதும், நீண்ட தாமதம் நிலவியதை சுட்டிக்காட்டப்பட்டது.
சிறுமி தங்கியிருந்த அறையில் ஒரு லைட்டர் மற்றும் மண்ணெண்ணெய் போத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வீட்டில் முன்பு பணிபுரிந்த ஒரு ஊழியர் இந்த வீட்டில் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.
அத்துடன், ரிஷாத் பதியுதீனின் மாமனார், மரணம் தொடர்பான தகவல்களை திரிவுபடுத்திய குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார்.
தீக்காயமடைந்த ஹிசாலினி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது பெயரை மாற்றி, சிங்கள மொழி பெயரை போல இஷாலினி என பதிவு செய்யப்பட்டது, அவரது வயதை 18 என பதிவு செய்யப்பட்ட தகவல்களையும் பிரதி மன்றாடியார் நாயகம் சுட்டிக்காட்டினார்.
ரிஷாத் பதியுதீன் வீட்டில் 8 சிசிரிவி கமராக்கள் செயற்பட்ட போதும், சிறுமி தீக்காயமடைந்த பின்னர், அவற்றில் 6 நிறுத்தப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டு, முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினரின் செயற்பாடு குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
அந்த கமராக்களை மொரட்டுவ பல்கலைகழகத்திற்கு அனுப்பி ஏதேனும் காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாக என்பதை ஆராய வேண்டுமென பொலிசார் விண்ணப்பித்தனர். அதை நீதிமன்றம் ஏற்று உத்தரவு வழக்கியது.
சிறுமியின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து, பிரேத பரிசோதனை நடத்த மூத்த தடயவியல் மருத்துவ அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவை நியமிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது வாடிக்கையாளர் தாக்கப்பட்டு பலவந்தமாக வாக்குமூலத்தில் கையெழுத்து பெறப்பட்டதாக தெரிவித்தார். அவர் எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.