வவுனியா மாவட்டத்திற்கு எதிர்வரும் புதன் கிழமை முதல் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு எதிர்வரும் புதன்கிழமை (28.07.2021) தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளது. தடுப்பூசி ஏற்ற தகுதியுடையவர்களின் விபரங்கள் பிரதேச செயலகத்தின் ஊடாக சேகரிக்கப்படுகின்றன.
தடுப்பூசிகளை மக்களுக்கு ஏற்றுவதற்காக பாடசாலைகள், பொதுகட்டிடங்கள் என்பன சுகாதார பிரிவினரினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திற்கு சினோபாம் அல்லது பைஸர் தடுப்பூசி கிடைக்கப்பெறும் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 1000 நபர்கள், சுகாதார பிரிவினர், தபால் சேவை பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.