மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவி்த்தும், விவசாயிகள் பிரச்சினையில் தீர்வு காணவும் வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி இன்று டிராக்டர் ஓட்டி நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் டெல்லியின் புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்குதீர்வு காண விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே 12 சுற்றுப் பேச்சு நடத்தியும் தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையே வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நடைமுறைப்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் தடைவிதித்து, அந்தச் சட்டங்களை ஆய்வு செய்யக் குழு அமைத்துள்ளது.
இந்நிலையில் வயநாடு எம்.பி.யும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, இன்று டிராக்டர் ஓட்டிக் கொண்டு நாடாளுமன்றத்துக்கு வந்தார். விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணவும் வலியுறுத்தி ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டிக்க கொண்டு இன்று நாடாளுமன்றம் வந்தார்.
அப்போது ராகுல் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ நான் விவசாயிகளின் சார்பில் அவர்களின் கருத்துக்களை நாடாளுமன்றத்துக்கு தாங்கி வந்துள்ளேன். விவசாயிகளின் குரல்களை மத்திய அரசு நசுக்குகிறது, நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினை பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை.
வேளாண் சட்டங்கள் போர்வையில் இருக்கும் கறுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயன் அளிக்கும் என இந்த தேசத்துக்கே தெரியும்.
மத்திய அரசின் கூற்றின்படி, விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், போராட்டம் நடத்தும் விவசாயிகள் அனைவரும் தீவிரவாதிகள். ஆனால், உண்மையில், விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
ராகுல் காந்தியுடன் டிராக்டரில் காங்கிரஸ் எம்.பிக்கள் பலர் ஊர்வலமாக வந்து மத்தியஅரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
பாரதிய விவசாயிகள் சங்கத் தலைவர் திகைத் கூறுகையில் “ டிராக்டரில் ஊர்வலமாக வருவது தவறில்லை. அதிலும் டிராக்டரில் தேசியக் கொடியை எந்திச் செல்வது அனைவருக்கும் ஊக்கமளிக்கும்” எனத் தெரிவித்தார்