நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம மேற்கு தோட்ட சிறுமி யின் உயிரிழப்புகு நீதி கோரி, இராகலை நகரில் உள்ள இராகலை முருகன் கோவிலுக்கு அருகில், இன்று (25) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
“சிறுவர் உரிமை மீறளுக்கு எதிராக ஒன்றிணைவோம்” எனும் தொனிப்பொருளில், ஒன்றிணைந்த பொது அமைப்புகளுடன் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, இந்தப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியது.
இதன்போது டயகம சிறுமி ஹிசாலியின் மரணத்திற்கு நீதி வேண்டும், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடை செய்து அவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், உள் நாட்டில் குடும்ப வறுமை காரணமாக வீட்டுப் பணியாளர்களாக அமர்த்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க வேண்டும், மலையக பெருந்தோட்ட சிறுவர்கள் எதிர்காலத்தில் கல்வி, தொழில்வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் உரிமையுடையவர்களாக வாழ தனி உரிமை சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் ஆகிய நான்கு முக்கிய கோரிக்கைகள் உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கோசங்களும் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்தில், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெத்திலிங்கம் மகேந்திரன், புதிய கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்க தலைவர் சட்டத்தரணி எஸ்.மோகனராஜன், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு செயலாளர் எஸ்.மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
–க.கிஷாந்தன்-