தான் பிரசவித்த குழந்தையை வைத்திருந்தால், தனக்கு திருமணமாகாது என கூறி, பிரசவித்த பிள்ளையை 5 நாட்களாக வேறொருவரிடம் கொடுத்தனுப்பிய தாய் அடையாளம் காணப்பட்டு, பொலிசாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று (20) நடந்தது.
கரணவாய் கிழக்கு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் 5 நாட்களின் முன் பிரசவித்த குழந்தையை, தனது சகோதரியிடம் கொடுத்தனுப்பியிருந்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிரசவித்த பெண், அங்கிருந்து வெளியேறியதும், குடும்பநல உத்தியோகத்தர் அந்த பெண்ணை பார்வையிட சென்றார். எனினும், குழந்தை வீட்டில் இருக்கவில்லை. பிசவித்து 5 நாட்களாக, சிசு வீட்டில் இல்லாததால் சந்தேகமடைந்த குடும்பநல மாது, நெல்லியடி பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.
இதையடுத்து, விரைந்து செயற்பட்ட நெல்லியடி பொலிசார், 30 வயதான அந்த பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி ஒரு பிள்ளையை பிரசவித்துள்ளார். தற்போது, கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
கட்டிட வேலைக்கு வந்த அறிமுகமற்ற ஒருவரின் மூலம் ஏற்பட்ட கர்ப்பத்தினால் பிரசவித்த சிசுவை, யாழ்ப்பாணத்திலுள்ள தனது சகோதரியிடம் கொடுத்தனுப்பியதாகவும், தன்னை ஒருவர் திருமணம் செய்ய விரும்புவதாகவும், குழந்தையுடன் இருந்தால் அவர் திருமணம் செய்ய மாட்டார் என்பதால், சகோதரியிடம் சிசுவை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த பெண்ணின் சகோதரி சிசுவுடன் பொலிஸ் நிலையம் வந்தார்.
பிரசவித்த பெண்ணிடமே சிசுவை ஒப்படைத்த பொலிசார், அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.