பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த இளைஞர் ஒருவர், தன்னை தொடர்ந்து தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்ததாக உயிரிழந்த சிறுமி இஷாலினியின் தாயாரான ஆர்.ரஞ்சினி தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.
ரிஷாட் எம்.பியின் வீட்டிலுள்ள இளைஞர் ஒருவர் தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருவதாக, தனது மகள் தொலைபேசியூடாக தெரிவித்துக் கொண்டிருந்தபோது, தனது மகளிடமிருந்து தொலைபேசியைப் பறித்த அந்த இளைஞர், ரிஷாட் பதியூதீனின் மனைவியை சிறுமி எதிர்த்துப் பேசுகிறார் என்று தன்னிடம் கூறியதாக சிறுமியின் தாயார் தெரிவித்தார்.
தனது மகளை அடிக்க வேண்டாம் என ரிஷாட் பதியூதீனின் மனைவியிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் ரிஷாட் எம்.பியின் வீட்டில் பணிபுரிய முடியாது என்று தனது மகள் இறுதியாக தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனையில் அவர் நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது. கர்ப்பம் தரிக்காத விதமாக அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி, கொழும்பு பௌத்தலோக மாவத்தையிலுள்ள ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்ட போராட்டம் நடந்தது.
12.11.2004 இல் பிறந்த இஷாலினி, 15 வயதில் பணிப்பெண்ணாக ரிஷாத் வீட்டிற்கு சென்றார். அவர் ரிஷாத் வீட்டிற்கு பணிக்கு சென்ற பின்னர், விடுமுறையில் வீடு திரும்ப அனுமதிக்கப்படவில்லையென அவரது சகோதரன் குற்றம்சாட்டியிருந்தார்.
இதேவேளை, ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த ஆண் பணியாளரின் தொலைபேசியை பொலிசார் பொறுப்பேற்றுள்ளனர்.