ஈரானின் எண்ணெய் வளம் நிறைந்த தென்மேற்கு அஹ்வாஸ் பிராந்தியத்தில் நீர் பற்றாக்குறையையடுத்து நடந்து வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
ஈரானில் ஈத் முதல் நாளான நேற்று செவ்வாயன்று தொடர்ச்சியாக ஆறாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
தென்மேற்கு பிராந்தியத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில், ஈரான் ஆட்சியாளர்களிற்கு எதிரான கோசமெழுப்பும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
தென்மேற்கு குஜெஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளது. தொடர்ச்சியான மின் தடையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மாத தொடக்கத்தில் பல நகரங்களில் எதிர்ப்புக்கள் ஆரம்பித்தது.
கடுமையான வறட்சி காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசு விளக்கமளித்துள்ளது.
ஆனால் எதிர்ப்பாளர்கள் அரசாங்கமே காரணம் என்று கூறுகின்றனர்.
அரசாங்கத்தின் பாரபட்சமான கொள்கைகளினாலேயே அரபுக்கள் வாழும் குஜெஸ்தானில் நீர் நெருக்கடி ஏற்பட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
#انا_عطشان
28تیر#الخفاجیه#سوسنگرد pic.twitter.com/I65MsKSA5w— Meytham al mahdi (@Meytham5) July 19, 2021
குஜெஸ்தானில் இருந்து அதிகப்படியான நீர், அதிக பாரசீக மக்கள் வாழும் மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், தமது பிராந்திய மக்கள் தொகையை குறைக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.