யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் நேற்று (19) விடுதலை செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் ஐவரிடம் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லாததால் வழக்கை தொடர முடியவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் விண்ணப்பம் முன்வைக்கப்பட்ட நிலையில் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அதிகாலை வேளை அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரும் அடங்கினார்.
கடந்த ஏப்ரல் மாத முற்பகுதியில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 3 மாதங்களின் பின்னர் சந்தேக நபர்கள் ஐவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.
ஐவருக்கும் எதிராக பயங்கரவாத சட்டத்தின் பிரிவின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேக நபர்கள் ஐவரிடம் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லாததால் வழக்கை தொடர முடியவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
அதனால் சந்தேக நபர்கள் ஐவரையும் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.