மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது .
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஒரே ஒரு போஸ்டரை மட்டும் வெளியிட்டுவிட்டு, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதால், தனியாக போஸ்டர் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்துக்கான போஸ்டரைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.
அரங்குகள் அமைத்துப் படமாக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்துவிட்டது படக்குழு. தற்போது வெளிப்புறங்களில் படமாக்க வேண்டிய காட்சிகளைப் புதுச்சேரியில் படமாக்கி வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், கலை இயக்குநராக தோட்டா தரணி, எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.