25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
விளையாட்டு

சதாசிவம்: இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் தமிழ் கப்டன்; கொலைப்பழியால் முடிந்த கிரிக்கெட் வாழ்க்கை!

♦வே. கோபி மாவடிராஜா

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான தமிழர்  மகாதேவன் சதாசிவத்தின் துடுப்பாட்டத்தை நேரில் பார்த்த பலர் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. ஆனால், உயிரோடு இருக்கும் சிலரும் தங்கள் வாழ்க்கையில் அப்படியொரு துடுப்பாட்டத்தை  மீண்டும் கண்டதேயில்லை. மிட் ஓனிலும், கவர்ஸிலும், லெக் சைடிலும் பந்தை அவர் தூக்கி அடிப்பதை பற்றி இன்றும் கண்கள் பிரகாசிக்க கதை சொல்பவர்கள் உண்டு!

சுழற்பந்து வீச்சில் கீப்பரின் கைகளுக்கு அருகே சென்று இவர் ஆடும் கட் ஷொட்டைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்குமாம். இவர் விளையாட வந்தாலே மைதானத்தில் பெண்கள் கூட்டம் குவியுமாம்.

அவர்தான் இலங்கை தமிழரான ‘சதா’ என அழைக்கப்படும் மகாதேவன் சதாசிவம். 1915ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த சதாசிவம், தனது 15 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். கல்லூரிகள் மற்றும் உள்ளூரில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனது திறமையை தொடர்ந்து சீராக வெளிப்படுத்தி வந்தவருக்கு ஆரம்பத்தில் ஏனோ இலங்கை அணியில் இடம் கிடைக்கவில்லை.

குறிப்பாக, 1940/41-களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த இலங்கை கிரிக்கெட் அணியில் சதாசிவம் இடம்பெறாதது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. அவரின் நிராகரிப்புக்குப் பின்னால் வேறு காரணங்கள் இருக்கிறது என்கிற பேச்சு இலங்கை முழுவதும் பரவியது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் பெரிதாக கவலை கொள்ளவில்லை சதா.

1944/45 ஆண்டு வாக்கில் நடைபெற்ற பாம்பே பெண்டாங்குலர் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இஸ்லாமியர்கள் அணியும், ரெஸ்ட் அணியும் மோதிக் கொண்டன. இதில் ரெஸ்ட் அணிக்காக களம் கண்ட சதாசிவத்திற்கு அதுதான் அறிமுகப் போட்டி.

முதல் போட்டி… வெளிநாட்டு மண் என எந்த பயமும் சதாவிடம் இல்லை. எதிரணியில் ஒன்பது வீரர்கள் பந்து வீசியும் அவரை ஆட்டமிழக்க வைக்க முடியவில்லை. முடிவில் 169 நிமிடங்கள் களத்தில் நின்று 101 ரன்கள் அடித்தார் சதா. இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

பொதுவாக ‘ரெஸ்ட்’ அணியில் கிறிஸ்தவர்களும் ஆங்கிலோ இந்தியர்களுமே இடம் பெற்றிருப்பார்கள். கொழும்பைச் சேர்ந்த சதாசிவமும் கிறிஸ்தவர் என்று நம்பி அணியில் சேர்த்துக் கொண்டனர். ஆனால், அவர் கிறிஸ்தவர் இல்லை என்பது மிகவும் தாமதமாகவே தெரிந்திருக்கிறது.

சதாசிவத்தின் கரியரில் மூன்று போட்டிகள் முக்கியமானது. காலத்தை வென்ற துடுப்பாட்ட வீரன் என்ற பெயரை இந்த போட்டிகளே அவருக்கு பெற்றுக் கொடுத்தது. 1944/45இல் சிலோன் அணியோடு விளையாடுவதற்கு கொழும்பு வந்தது இந்திய அணி.

முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்களில் அவுட்டாகினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களை ஓட ஓட விரட்டினார் சதாசிவம். அந்த சமயத்தில் இந்திய அணியில் லாலா அமர்நாத், பானர்ஜி, மங்கட், சிஎஸ் நாயுடு போன்ற பலமான பந்துவீச்சாளர்கள் இருந்தனர். சிலோன் அணி அடித்த 225 ரன்னில் சதாசிவம் மட்டும் 111 ரன்கள் அடித்தார்.

அவரது துடுப்பாட்டத்தை ரசித்த இந்திய அணியின் கப்டன் விஜய் மெர்சன்ட், சிலோன் அணியின் டிரெஸ்ஸிங் அறைக்கே சென்று, சதாசிவத்திற்கு ஸ்டம்ப்பை பரிசாகக் கொடுத்தார்.

இன்னொன்று, 1947ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தென் இந்திய அணிக்கு எதிரான போட்டி. சேப்பாக்கம் மைதானத்தில் பல வீரர்கள் பல சிறப்பான இன்னிங்ஸை விளையாடியுள்ளனர். ஆனால், சதாசிவம் விளையாடியது போன்று வேறு எந்த ஆட்டக்காரரும் விளையாடியதில்லை என இந்தப் போட்டியை நேரில் பார்த்தவர்கள் சொல்கின்றனர்.

சாய்வான தொப்பியை அணிந்து கொண்டு, கழுத்தில் ஒரு துணியை கட்டிக் கொண்டு மிகவும் கஷுவலாக களம் இறங்கிய சதாசிவம், மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் பந்தை விரட்டி அடித்திருக்கிறார். சென்னை ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்த சதாசிவம் அன்று மொத்தமாக அடித்த ரன்கள் 215. சென்னையில் ஒரு டபுள் சென்சுரி.

இலங்கை அணி

மற்றொரு முக்கியமான போட்டி 1950ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற கொமன்வெல்த் XI அணியுடனான போட்டி. இந்த அணியில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த அப்போதைய பல முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். சிலோன் அணி 153 ரன்களில் ஓல் அவுட் ஆனது. ஆனால், அதில் சதாசிவம் அடித்த ரன்கள் மட்டும் 96. அவர் அவுட்டாகி வெளியேறிய போது அனைத்து வீரர்களும் இரு பக்கமும் நின்று கை தட்டி பாராட்டி வழியனுப்பினர். “சிறந்த உலக அணியை தேர்ந்தெடுக்கச் சொன்னால், நான் முதல் ஆளாக சதாசிவத்தை தான் தேர்ந்தெடுப்பேன்” என்றார் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கப்டன் ஃப்ராங்க் வோரல்.

சதாசிவத்தின் துடுப்பாட்டம் எந்தளவிற்கு சிறப்பாக இருந்ததோ, அதை விட அவரைப் பற்றி பல சர்ச்சைகள் வலம் வந்தன. ஒழுக்க குற்றச்சாட்டுகள் அவர் மீது அடுக்கப்பட்டன. 90 களில் ஜயசூர்ய மட்டையில் ஸ்பிரிங் வைத்திருந்தார் என்பதுபோல, 50களில் சதாசிவம் துடுப்பாட்டம் செய்யும்போது கூல்டிரிங்ஸில் மது நிரப்பிக் கொடுக்கிறார்கள் என்கிற வதந்தியும் உலா வந்தது.

1948ஆம் ஆண்டு டொன் பிராட்மன் தலைமையிலான அவுவுஸ்திரேலிய அணி இலங்கை வந்திருந்த போது, இலங்கை அணிக்கு கப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சதாசிவம். சிங்களவர் பெரும்பான்மையாக இருந்த சிலோன் அணியின் கப்டனாக சதாசிவம் எனும் தமிழர் பொறுப்பேற்று விளையாடியது மிகப்பெரிய சாதனையாகக் கொண்டாடப்பட்டது.

சிறப்பாக சென்று கொண்டிருந்த சதாசிவத்தின் கிரிக்கெட் கரியரில் பேரிடி ஒன்று தாக்கியது. தனது அழகான துடுப்பாட்டத்தால் பல பெண்களின் மனதைக் கவர்ந்த சதாசிவத்தின் மீது, அவரது மனைவியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அந்தக் காலத்தில் இந்த கொலை வழக்கு மிக பிரசித்தம். பத்திரிகைகளிலும், வானொலியிலும் இக்கொலையே பேசுபொருளாக இருந்தது. கொலைப் பழி காரணமாக சிறை தண்டனை அனுபவித்த சதா, விசாரணையின் முடிவில் நிரபராதி என விடுவிக்கபட்டார்.

விடுதலைக்குப் பிறகு இலங்கையை விட்டு வெளியேறி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வசித்த சதாசிவம், இருநாட்டு அணிகளுக்கும் கப்டனாக இருந்தார். இன்றுவரை மூன்று நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு கப்டனாக இருந்தவர் என்கிற சாதனை சதாசிவத்திடம்தான் இருக்கிறது.

மற்ற வீரர்கள் ரன் அடிக்கவே திணறும் பிட்ச்சில் சர்வ சாதரணமாக சதம் அடிக்கும் திறமை ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும். அது சதாசிவத்திடம் இருந்தது. இலங்கை அணி டெஸ்ட் அந்தஸ்து பெறுவதற்கு முன்பே இவர் விளையாடியதால் பலருக்கு இவரைப் பற்றி தெரியாமல் போனது. மொத்தம் 11 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சதாசிவம், மூன்று சதம் மற்றும் மூன்று அரைசதம் என 753 ரன்கள் அடித்துள்ளார்.

கரி சோபர்ஸ்- சதாசிவம்

நவீன கால கிரிக்கெட் நிபுணர்கள் இவரை ஒரு துடுப்பாட்ட வீரராக கூட கருதாதது தான் மிகப்பெரிய சோகம். இன்று ஒரு டி20 போட்டியில் 50 ரன் அடித்தாலே பெரிய வீரர் என்று கொண்டாடுகிறோம். ஆனால், அன்று அவர் சென்னையில் அடித்த இரட்டை சதம் பல நூறுகளுக்குச் சமம். திறமை இருந்தால் எங்கும் வெற்றி பெறலாம் என்பார்கள். ஆனால், திறமையிருந்தாலும் நீங்கள் சரியான இடத்தில் இருந்தால் மட்டுமே உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும்.

சதாசிவம், அவுஸ்திரேலியாவிலோ அல்லது இங்கிலாந்திலோ பிறந்திருந்தால் கிரிக்கெட்டின் பிதாமகன் என கொண்டாடப்பட்டிருப்பார் என்பதே உண்மை!

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ஹாரி புரூக்

Pagetamil

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்பிரிக்க அணி முதலிடம்

Pagetamil

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியை இரண்டரை நாட்களில் முடித்த அவுஸ்திரேலியா வெற்றி!

Pagetamil

கஸ் அட்கின்சன் ஹட்ரிக் சாதனை: சரண் அடைந்த நியூஸிலாந்து அணி!

Pagetamil

வினோத் காம்ப்ளிக்கு உதவ முன்வந்த ‘1983 உலகக் கோப்பை’ வெற்றி நாயகர்கள்!

Pagetamil

Leave a Comment