30.5 C
Jaffna
April 13, 2025
Pagetamil
இந்தியா

ரியல் ஹீரோவாக இருங்கள்; கார் இறக்குமதி வரி கட்டாத நடிகர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் அறிவுரை: ரூ1 இலட்சம் அபராதம்!

ரோல்ஸ் ரோய்ஸ் காருக்கு இறக்குமதி வரிகட்ட மறுத்து நீதிமன்றத்தை அணுகிய நடிகர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் ரூ.1 இலட்சம் ரூபா அபராதம் விதித்து மனுவைத் தள்ளுபடி செய்தது. வரி என்பது பங்களிப்பு, அது நன்கொடையல்ல என நீதிபதி அறிவுறுத்தினார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ரோய்ஸ் ஹோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு சுங்க வரி செலுத்தியுள்ளார். ஆனால், நுழைவு வரி செலுத்தாததால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் காரைப் பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்கவில்லை.

இந்நிலையில் நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்தும் வரி விதிக்கத் தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், “காரை இறக்குமதி செய்ய சுங்கத்துறையிடம் சுங்க வரி செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் காரை வட்டாரப் போக்குவரத்துக் கழகத்தில் பதிவு செய்ய இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அதன் காரணமாக காரைப் பயன்படுத்த முடியவில்லை. ஆகவே, நுழைவு வரி விதிக்கும் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர் தான் எந்தத் தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை எனக் கேள்வி எழுப்பினார். அப்போது நடிகர் விஜய் தரப்பில், தான் தமிழ் சினிமாவில் நடிகராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதி, புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனவும் குறிப்பிட்ட நீதிபதி, வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்புதானே தவிர, தானாக வழங்கக்கூடிய நன்கொடை இல்லை எனவும் தெரிவித்தார்.

மக்கள் செலுத்தக்கூடிய வரிதான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றும், தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

சமூக நீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகம் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டார்.

மேலும், நடிகர் விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, நடிகர் விஜய்க்கு 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அதை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Pagetamil

திருமணத்தில் திடீர் திருப்பம்: மணமகளை விட்டுவிட்டு மாமியாருடன் ஓடிய மாப்பிள்ளை!

Pagetamil

அதிமுக- பாஜக: “இபிஎஸ் தலைமையில் கூட்டணி” – உறுதிசெய்த அமித் ஷா

Pagetamil

“தேசிய அளவில் அண்ணாமலைக்கு கட்சிப் பொறுப்பு” – அமித் ஷா உறுதி

Pagetamil

பாஜக மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்திரன்! – பின்புலம் என்ன?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!