“இலவசக்கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதற்கு எதிராக கல்வி சமூகத்தின் போராட்டம் தொடரும். அத்துடன், பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.” – என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் வேலு இந்திரச்செல்வன் தெரிவித்தார்.
10 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து நுவரெலியாவில் இன்று மாலை (12) நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘மாணவர்களுக்கான இலவசக்கல்வி உரிமையை பாதுகாத்துக்கொள்வதற்காக நாம் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்திருக்கின்றோம். அந்தவகையில் இலவசக் கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தையும் எதிர்க்கின்றோம். ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது எமது சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில்கூட அவர்களை பலவந்தமாக தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையத்தில் உரிய வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. எனவே, மாணவர்களின் கல்வி உரிமைக்காக களமாடியவர்களை உடனடியாக அரசாங்கம் விடுவிக்க வேண்டும்.
இது ஜோசப் ஸ்டாலினுக்கான போராட்டம் மட்டும் அல்ல. இலங்கை வாழ் மாணவர்களுக்கான போராட்டமும் கூட. இலவசக் கல்வியை காக்க நாம் தொடர்ந்தும் போராடுவோம். ஒன்லைன் கல்வியில் இருந்து விலகியுள்ளோம். நியாயம் கிடைக்கும் வரை அப்போராட்டம் தொடரும்’ என்றார்.
–க.கிஷாந்தன்-