ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேகமாக தயாராகி வருகிறது ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நவம்பர் 4ம் திகதி தீபாவளியையொட்டி இந்த படம் ரிலீசாகும் என ஏற்கனவே படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் 9ம் திகதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து சென்னை திரும்பிய ரஜினி சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மருத்துவ பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததால் நாளை அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்ப உள்ளார்.
இதையடுத்து ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள பெலிசியா டவர்ஸில் செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி கலந்துக்கொண்டு நடிக்கவுள்ளார். இத்துடன் ‘அண்ணாத்த’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும். இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து வருகிறது. அந்த வாய்ப்பு அநேகமாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமிக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.