யாழ்ப்பாண தீவு பகுதிகளை நோக்கி சீனா, பாகிஸ்தான் நிறுவனங்கள் அகலக்கால் வைக்கின்றன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கும். தமிழ் மக்கள் எவ்வளவு பிரச்சனைகளென்றாலும், தமது தொப்புள் கொடி உறவான இந்தியாவுடன்தான் நிற்பார்கள். இந்தியாவிற்கு எதிரான உங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி, நாட்டில் நல்ல நிலைமையை ஏற்படுத்துங்கள் என நாடாளுமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் யாழ்ப்பாணம் வந்த பாகிஸ்தான் தூதர் மண்டைதீவில்தான் தங்கியிருந்துள்ளார். மண்டைதீவு, அல்லைப்பிட்டி பகுதிகளை பார்வையிட்டுள்ளார். இது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு அண்மையிலுள்ள அல்லைப்பிட்டியில் பாகிஸ்தான் நிறுவனமொன்று ஹொட்டல் கட்ட முயன்ற போது, அது தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இப்படியான புதிய முயற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதா?
நெடுந்தீவில் 40 ஏக்கர் காணி வீதம் இரண்டு தனிநபர்களிற்கு வழங்கப்படவுள்ளது. இது சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட போகிறது. அது போல, யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தையும் சீன நிறுவனத்திற்கு வழங்கும் முயற்சிகள் நடக்கிறது என்றார்.