பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிப்பதில் இருந்து இன்று மற்றொரு உயர்நீதிமன்ற நீதிபதி விலகிவிட்டார்.
மனுவை விசாரிக்க திட்டமிட்ட நீதிபதிகள் குழாமிலிருந்து நீதிபதி மஹிந்த சமயவர்தன இன்று விலகுவதாக அறிவித்தார்.
இந்த மனுவை விசாரிப்பதிலிருந்து விலகும் நான்காவது உயர்நீதிமன்ற நீதிபதி இவராவார்.
இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி மஹிந்த சமயவர்தன தனிப்பட்ட காரணங்களால் விசாரணை நீதிபதிகள் குழாமிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.
முன்னதாக, நீதிபதிகள், ஏ.எச்.எம்.டி நவாஸ், யசந்த கொடகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலக்கிக் கொண்டனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று அறிவிக்க உத்தரவிடக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் சகோதரர் ரியாஜ் பதியுதீன் இந்த அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்தார்.
மனு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்.